ஜிம் எனப்படும் உடற்பயிற்சி செய்யும் இடங்களில் எனக்கு எப்போது ஒரு காதல். இதை படித்து விட்டு நான் ஏதோ ஜிம்மே கதியாக இருக்கும் ஆள் என்று நினைக்க வேண்டாம்.
ஜிம்களை பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்விகள் பல. அதில் ஒன்று, ஏன் எல்லா உடற்பயிற்சி நிலையங்களிலும் கண்ணாடியால் ஆன சுவர்களை அமைக்கின்றார்கள். வெளியே இருந்து உள்ளே உடற்பயிற்சி செய்பவர்களை பார்க்க கண் கோடி வேண்டும். ஒரு அழகிய ஆங்கில படத்தை slow motion இல் பார்ப்பது போல ஒரு பரவசம். ஆண்களும், பெண்களும் பாட்டு கேட்டு கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ ட்ரெட்மில்லிலும், வேறு பெயர் தெரியாத உபகரணங்களிலும் கருமமே கண்ணாக இருப்பார்கள்.
கண்ணாடி சுவர் வழியாக தெரியும் இந்த காட்சியை பார்த்தாவது சில, பல ஜென்மங்கள் மெம்பர் ஆகி விடுவார்கள் என்ற நப்பாசையாக கூட இருக்கலாம். என்ன சொன்னாலும் இப்படி கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செய்வது ஒரு கவிதை தான். இது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் விளங்கும்.
********************
என் உறவினரின் மகன், 10 வயது பொடியன். சிறு வயதிலே ஒபிஸிட்டி பிரச்சினை. குழந்தையாக இருக்கும் போது கொழுக், மொழுக் என்று இருந்தான். பெற்றோரும் எங்கள் பிள்ளை போல யாரால் பிள்ளை வளர்க்க முடியும் என்று கொண்டாடிக் கொண்டிருந்தனர். மருத்துவர் சொன்னார் வெயிட் குறைக்காவிட்டால் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம் என்று. சிறுவர்களுக்கான ஜிம்மில் பொடியன் சேர்க்கப்பட்டான். ஒரு பெரிய பையுடன் அவன் போகும் அழகே தனி தான்.
ஒரு நாள் அந்த பொடியனுக்கும், வேறு ஒருவருக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு.
நபர் : ஏன்டா பொடியா அந்த பையில் என்ன இருக்கு?
பொடியன் : ஏன் கேட்கிறீங்கள் மாமா?
நபர் : இல்லை உன் சைஸிற்கும் அந்த பைக்கும் பொருத்தம் இல்லையே?
பொடியனின் அம்மா : அதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் வாங்கியது. நீ உன் வேலையை போய் பார்.
நபர் : நீயும் உன் மகனை ஜிம்முக்கு எவ்வளவு நாட்களாக அனுப்புகிறாய் அவன் உடம்பு குறையவே இல்லை ஏன் என்று யோசித்து பார்த்தாயா?
பொ.அம்மா : நீ என்னடா சொல்ல வருகின்றாய்?
(அந்த நபர் பொடியனின் பையை வலுக்கட்டாயமாக வாங்கி, அப்படியே கவிழ்த்து கொட்டுகின்றார். அதில் நொறுக்கு தீனிகள் நிறைய வெளியே வருகின்றது.)
நபர் : இப்ப விளங்குதா?
பொ.அம்மா : அடப்பாவி( டென்ஷனுடன் மகனை முறைக்கின்றார்)
சாப்பிட வேண்டிய வயதில் அவனின் நிலைமையை பார்க்க எனக்கு கவலையே வந்தது.