Wednesday, January 5, 2011

என் தங்கைக்காக


கடல் தண்ணீர் கண்களில் பட்டதும் எரிச்சலாக இருந்தது. கனவா? உண்மையா என்று விளங்கவில்லை அகிலனுக்கு. எங்கும் மரண ஓலம் காதுகளை துளைத்து எடுத்தது. யாரைக் காப்பாற்ற, யாரை விட என்று சில நொடிகள் குழம்பி போனான். மறு நொடி பக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

"அண்ணா" என்ற குரல் அந்த இடமே அதிரும்படி எதிரொலித்தது. எப்படி என் தங்கையை மறந்தேன் என்று நினைத்துக் கொண்டான். அம்மா, தாத்தா இருவரும் எங்கே? யோசிக்க நேரம் இல்லை. தங்கையை காப்பாற்ற வேண்டும்.

இருள் பிரியாத காலை நேரம். கிட்டத் தட்ட 30 பேர் அளவில் இருக்கும். இதில் என் தங்கையை எங்கே தேடுவேன் என்று திகைத்து நின்றான். ஆனால், குரல் வந்த திசையினை வைத்து, அந்தப் பக்கம் நீந்தத் தொடங்கினான். யாரோ வேகமாக இவன் கையினைப் பற்றினார்கள். மரண பயத்தில் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. கையினை விலக்கப் போனான். தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அந்தப் பெண்ணின் கண்கள் கெஞ்சின. சிறிதும் தாமதிக்காமல் கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

**********************************

அகிலன், இன்று இரவு வள்ளத்தில் இந்தியா போகிறோம். ரெடியா இருக்க சொன்னார் ஓட்டி", என்றார் அம்மா.

அம்மா! இது 10 வது தடவை இருக்குமா? ஒவ்வொரு முறையும் போய் காத்திருந்து விட்டு, இரவானதும் திரும்பி வருவோமே. இந்த நாட்டிலேயே இருந்து செத்து போகலாம்" என்ற சொன்ன மகனை முறைத்தார் தாய்.

இல்லைப்பா! சாக பயப்படவில்லை. உன் தங்கை மேகலாவை நினைச்சா பயமா இருக்கு. சில மாதங்களின் முன்பு பக்கத்து தெருவில் கங்காவை இராணுவம் கொண்டு சென்றார்கள். இப்ப எங்கே என்றே தெரியவில்லை.", என்ற தாயை இரக்கத்துடன் நோக்கினான் அகிலன்.

" சரிம்மா. இன்று இரவு போகலாம். மேகலாவிடம் சொன்னீங்களா?", என்று வினவினான்.

" மேகலாக்கு எப்போதும் சம்மதமே. குடும்பத்திற்கு ஒரு பை தான் கொண்டு வர வேண்டும் என்று ஓட்டி கண்டிப்பா சொல்லிட்டார். உன் ஆடைகள் ஒரு செட் மட்டும் கொண்டு வாப்பா....", என்று பேசிக் கொண்டே போன அம்மாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

எதை விட, எதை எடுக்க என்று யோசிக்காமல் ஒரே ஒரு செட் உடையினை எடுத்து தாயிடம் நீட்டினான்.

இரவானதும் கடற்கரைக்கு போனார்கள். அமாவாசை இருட்டு. அம்மாவும், தாத்தாவும் அருகிலேயே நின்று கொண்டார்கள். தங்கை மேகலா இவனின் கையினை பற்றிய படியே நின்றாள். காற்று இதமாக வீசியது. தூரத்தில் கடற்படை கப்பலின் வெளிச்சப் பொட்டு மங்கலாக தெரிந்தது.
இன்று இந்தியா போக முடியுமா தெரியவில்லை என்று மனதினுள் எண்ணிக் கொண்டான்.

சுமார் 12 மணி அளவில் வள்ளம் வந்து சேர்ந்தது. நின்றவர்கள் சத்தம் போடாமல் ஏறிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பினை தாண்டும் வரை மெதுவாகவே வள்ளம் ஊர்ந்து சென்றது. இந்தியா கடற்பரப்பு வந்ததும் படகு வேகமாக செல்லும் என்று ஓட்டி அறிவித்தார். கடலில் எப்படித் தான் எல்லை தெரியுமோ என்று நினைத்துக் கொண்டான் அகிலன்.

சில மணிநேரங்கள் கடந்த பின்னர் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. அசுர வேகத்தில் சென்ற படகு நிலைகுழைந்து போனது. படகில் இருந்தவர்கள் நாலா புறமும் தூக்கி வீசப்பட்டார்கள்.

******************************
மீண்டும் அந்த இடத்திற்கு விரைந்தான். கால்களில் ஏதோ தட்டுப்பட மூச்சடக்கி உள்ளே மூழ்கினான். கைகளை பற்றினான். அது ஒரு பெண்ணின் கை என்பது விளங்கியது. வளையல்கள் தட்டுப்பட்டது. இது என் தங்கையின் வளையல்கள் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டான்.


தங்கைக்கு அப்பா ஆசையாக வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய வளையல்கள். சந்தேகமே இல்லை. இது என் தங்கை மேகலா தான். வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

வேகமாக பிடித்து இழுத்தான். ஆனால், பிடி நழுவியது. நுரையீரல் சுத்தமான காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மேலே போய் மூச்சிழுத்து உள்ளே வர நேரம் இருக்கவில்லை.
" அண்ணா! என்னை கைகளை பிடித்துக் கொண்டே இருங்கள். பிளீஸ்.. என்று மேகலா படகில் கெஞ்சியது ஞாபகம் வந்தது.

முன்பை விட இன்னும் அதிக பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஏதோ ஒரு அசுர சக்தி எதிர் திசையில் இழுத்துக் கொண்டே சென்றது. இப்போது அகிலனும் சோர்ந்து போயிருந்தான். மேலே போக எத்தனித்தான். மேகலாவின் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. மேகலாவுடன் சேர்ந்து அகிலனும் சமுத்திரத்தின் சுழலில் சிக்கிக் கொண்டான். தங்கையின் கையினை மட்டும் விடவில்லை. சமுத்திர அன்னையின் சுழலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டார்கள். அவளின் வெறி அடங்கியதும் காற்றில்லாத பந்துக்கள் போல மேலே மிதந்த இருவரையும் மீனவர்கள் தூக்கி கரையில் போட்டார்கள். மரணத்திலும் கை கோர்த்தபடியே இருந்த இருவரையும் கண்ட ஊரார்கள் அதிர்ந்து நின்றார்கள்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாயார் மட்டும் கரையில் இருந்த உயிரற்ற உடல்களை இனம் காண அழைத்து வரப்பட்டார். வாய் பொத்தி அழ ஆரம்பித்தவரை தேற்ற அங்கு அகிலனோ, மேகலாவோ இருக்கவில்லை.

(This story is based on an actual event that took place in the early 90's.)

19 comments:

  1. உண்மை கதை...மிகவும் கஷ்டமாக இருக்கின்றது...

    ReplyDelete
  2. வானதி உருக்கமான உண்மைக்கதை.இது மாதிரி எத்தனையோ?

    ReplyDelete
  3. நெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது

    ReplyDelete
  4. படிப்பதற்கே பதட்டமா இருக்கே. அங்கு மாட்டிக்கொண்டவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்.
    நினைச்சுக்கூட பாக்க முடியலை.

    ReplyDelete
  5. கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது இச்சிறுகதை.நல்ல நடை வானதி.

    ReplyDelete
  6. உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாய்.. கொடுமை. அந்த வலியை வார்த்தைகளில் அழகாக வடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. மனதை கனக்க வைக்கும் கதை என்று சொல்ல வந்தேன். உண்மை நிகழ்ச்சி என்றும் சொல்லி இருக்கிறீர்களே.... ம்ம்ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  8. ஐயோ! மனசு பதறுதே வானதி! உண்மைக் கதைன்னு பார்த்ததும் இன்னும் அதிகமாகுதே!

    ReplyDelete
  9. நெஞ்சை தொட்ட கதை வானதி!

    ReplyDelete
  10. வான்ஸ்ஸ்ஸ்... கதைபற்றி இப்போ நான் எதுவும் சொல்லமாட்டேன், சோகமாக இருந்ததைப்போல இருந்ததால்... ஆறுதலாகப் படிக்கலாம் என விட்டிருக்கிறேன்.

    அதிராவீட்டுக்கு வந்து, ஜெய்க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பூடாது எண்டு சொல்லிட்டுப் போக வந்தேன்:). அவர் ஏதோ ஆசனம் செய்கிறாராம்.. இலாவிடம்தான் விளக்கம் கேட்கவேணும்.

    வான்ஸ்... இப்போ நீங்க என் பெஸ்ட் ஃபிரெண்டூஊ, ஏன் தெரியுமோ? படம் பார்த்தனே... என்ன படம் என ஆரும் குறுக்க கேள்வி கேய்க்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  11. நல்ல நடையுடன் நெருடலாய் நகர்கிறது.. அருமை...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

    ReplyDelete
  12. மனதை ரணப்படுத்தும் க(த)ண்ணீர் கதை.....

    ReplyDelete
  13. Vanathy,padikkave mudiyala,manasu valikkuthu.Ithai anupaviththavarkal nilai...I don't know what to say! :( :'(

    ReplyDelete
  14. படிக்கும் போதும் படித்து முடிக்கும் பதட்டமாகவே இருந்தது வான்ஸ்! கதையை அருமையாய் நகர்த்தி //அல்ல// விரட்டியிருக்கிறீர்கள். குட்!!

    ReplyDelete
  15. ஆமா மூழ்கியவர்களை தலை முடியை தானே மேலே பிடித்திழுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். கையை பிடித்து இழுத்தால், இழுத்தவர்களும் சேர்ந்து உள்ளே போவார்கள் என்று சொல்வார்களே!! தலை முடியை பிடித்திழுத்து அவர்களை (கதையில்) காப்பாற்றி இருக்கக் கூடாதா??

    ReplyDelete
  16. கீதா, நன்றி.

    ஆசியா அக்கா, நன்றி.

    யாதவன், நன்றி.

    லஷ்மி ஆன்டி, நன்றி.

    ஸாதிகா அக்கா, நன்றி.

    அமைதி, மிக்க நன்றி.

    சித்ரா, மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.

    ReplyDelete
  17. சரவணன், நன்றி.

    ஹூசைனம்மா, நன்றி.

    சிவகுமாரன், நன்றி.

    சுதா, நன்றி.

    கருணாகரசு, நன்றி.

    மகி, நன்றி.

    நாட்டாமை, அந்த நேரம் அதெல்லாம் தோணாது. தங்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே ஒரே நினைவாக இருந்தது.
    மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!