Sunday, May 11, 2014

என் அம்மா


அன்னையர் தினம். இந்த தினத்தில் என் அம்மாவை பற்றி கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்தேன். என் அம்மா மிகவும் மன உறுதி மிக்கவர். மன உறுதி என்றால் மலையே பெயர்ந்து வந்தாலும் கவலைப்படமாட்டார். என்ன மலை தானே, என்று சொல்வார். மலை மீது ஏறிச் செல்லும் மன தைரியம் மிக்கவர். இரண்டு சம்பவங்கள் இங்கே கட்டாயம் சொல்கிறேன்.

1984, ஜூலை மாதம், இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில், 24 மணி நேரத்தில் எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். அதாவது மாற்றுத்துணி கூட இருக்கவில்லை. என் அம்மா அழுது புலம்பவில்லை. போன பொருட்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அக்கம் பக்கம் கொடுத்த துணிகள், சாப்பாடுகள் தான் எங்கள் உயிர்காத்தன. அதன் பிறகு யாழ்பாணம் சென்றோம். என் தந்தை எதிர்பாராத விதமாக அரசாங்க வேலையை விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

அம்மா அப்பாவிடம் சொன்னார், நீங்கள் வேலையை விட்டு விட்டேன் என்று ஒரு நாளும் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் கொடுத்த கைகள், கால்கள் இருக்கின்றன. நாங்கள் இருவரும் எங்கள் தோட்டத்தில் கஷ்டப்படுவோம். வரும் வருமானத்தில் குடும்பம் நடத்த பழகுவோம். ஆடம்பரம், படாடோபம் எதுவும் வேண்டாம், என்று சொன்னவர் ஆடுகள், மாடுகள், கோழி, காய்கறி தோட்டம், தென்னை, மா, வாழை, கீரை என்று தோட்டம் அமைத்து, இரவும் பகலும் பாடுபட்டார்கள். தோட்டத்தில் வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்வார். பட்டுப் புடவை, நகை என்று ஒரு நாளும் வாங்கியதில்லை.


எங்களுக்கும் தேவையான உணவுகள் செய்து கொடுப்பார்கள். ஆனால், உடை விடயத்தில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தான் எடுத்து கொடுப்பார்கள். பெரும்பாலும் அம்மாவே துணி எடுத்து தைத்துவிடுவார்கள். மற்ற மாணவிகள் போல ஸ்டைலாக அணிய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. ஏதோ கிடைத்ததை உடுத்தப் பழகிக் கொண்டோம்.
1987ல் மீண்டும் பிரச்சினைகள். வட்டமிட்ட குண்டு வீச்சு விமானங்களால் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை. ஆடுகள், மாடுகள் எல்லாவற்றினையும் கட்டிப் போட்டால் அவை இறந்து விடும் என்பதால் கட்டுக்களை அவிழ்த்து விட்டோம். எங்கள் வீட்டில் தொடர்ச்சியாக விழுந்த 4 குண்டுகளால் சில இறந்து போயின. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய போது ஒரு சுடுகாடு போல காட்சி தந்தது. எங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள். என் அம்மாவின் முகத்தினை பார்க்கிறேன். எந்த விதமான மாற்றமும் இல்லை.

என் அம்மா சொன்னார்கள், எங்கள் வீட்டினை மட்டும் இவர்களால் அழிக்க முடிந்தது. எங்களை, எங்கள் மன உறுதியினை இவர்களால் அழிக்க முடியாது. நாங்கள்  மீண்டு வருவோம், என்றார். எனக்கு அப்போது விளங்கவில்லை. எப்படி மீளப் போகிறோம். மீளவே முடியாத அடி அல்லவா?. காய்கறி தோட்டம் எல்லாமே நாசமாகி இருந்தது. ஆடுகள், மாடுகள் எல்லாமே இறந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன.
ஒரு நாள் நாங்கள் எங்கள் உறவினர் வீட்டுக்கு போகும் வழியில், ஒரு மாடு எங்களை உற்றுப் பார்த்த வண்ணம் நின்றது. பின்னர் பெருங்குரலில் அம்மா, அம்மா என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வந்தது. கூடவே ஒரு கன்றும். அது நாங்கள் வளர்த்த கமலம் என்ற பசு. அதன் கண்களில் இருந்து கண்ணீர் சொறிகின்றது. என் அம்மா அழுகிறார். அதனை கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிறார். இரண்டு தடவை வீடு, உடமைகள் இழந்த போது கலங்காதவர் இப்ப பாசமாக வளர்த்த பசுவைக் கண்டதும் கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதன் பிறகு அந்த பசுவும், கன்றும் அம்மாவை ஒட்டியபடியே  நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகவும் அம்மா பசு, கன்று பற்றியே பெருமை பேசிய வண்ணம் வந்தார். ஊர் பூராவும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். மீண்டும் அந்த பசு மூலம் கொஞ்சம் வாழ்க்கை சுமாராக போனது. எங்கள் மன உறுதியை இவர்களால் அழிக்க முடியாது என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ?

அதன் பிறகு இந்தியா, கனடா என்று இடம்பெயர்ந்து விட்டாலும் என் அம்மாவின் மன உறுதி இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது. அறுபது வயதிலும் உடற்பயிற்சிகள் செய்வார் என் அம்மா. ஒரு நாளும் மனம் உடைந்து போய் இருந்ததில்லை. அந்த மன உறுதியில் பாதியாவது எனக்கு இருந்தால் இமய மலையினையே தாவி குதித்து விடுவேன். என் அம்மாவைப் பற்றி என் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வேன். அவர்களாவது என் அம்மா போல் வளரட்டும் என்பது என் ஆசை.


10 comments:

  1. 1963 ல் கிட்டத்தட்ட இதே நிலை தான் எங்களுக்கும்.

    வித்தியாசம் நாடு கடத்தப்படவில்லை.
    வீடு கடத்தப்பட்டோம்.

    வீட்டின் சூழ்நிலை காரணமாக
    ஒரு வருடம் வன வாசம்.


    என் அம்மா மனம் தளரவில்லை.
    என் மனதில் உறுதி இருக்கிறது.கவலைபடவேண்டாம்
    என எனக்கும் என்னுடன் பிறந்த எட்டு உடன்பிறப்புகளுக்கும்
    சொல்லி,
    தனக்குத் தெரிந்த ஒரே வித்தையான சங்கீதம் சொல்லித்தந்து
    அதில் வந்த வருவாயில் எங்களை எல்லாம்
    காப்பாற்றினார்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. தாய் என்றும் உறுதி கொண்டவள்

    ReplyDelete
  3. சிறப்பிற்கு மேலும் சிறப்பு...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அந்த மன உறுதியில் பாதியாவது எனக்கு இருந்தால் இமய மலையினையே தாவி குதித்து விடுவேன். ///

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. நினைத்தே பார்க்க முடியவில்லை. சிலோனில் இருந்த ஒவ்வொரு தாயும் இப்படி தான் 80களில் தங்கள் மன உறுதியோடு இருந்து இருந்தார்கள் போலும். கனடாவில் வாழும் லோகநாயகி ஆண்ட்டியும் நிறைய கதை சொல்லி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. அம்மாவின் மன உறுதி வியக்க வைக்கிறது ..கமலத்தின் கதை கண்ணில் நீர் வரவைத்தது ..அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் !!
    அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்னையர்தின வாழ்த்துகள்!

    உங்கள் அம்மாவின் மன உறுதி மிகப் பெரிது...அவருக்கு வணக்கங்கள்!

    ReplyDelete
  8. மனதைப் பிசையும் சம்பவங்கள் வானதி..அம்மாவின் மன உறுதியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களிருவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கருத்துச் சொல்வதற்கு அப்பாற்பட்ட இடுகை.

    வான்ஸ் அம்மாவுக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!