Saturday, March 29, 2014

அவன் வள்ளி ஆனான்


நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது துறு துறுவென பார்த்துக் கொண்டிருந்த அம்மா பூனை, அதன் குட்டிகள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் என்று நினைத்தவன் என் மகள் மஞ்சுவை கண்டதும் கோபத்தினை அடக்கி கொண்டு, வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். என் முகத்தினை வைத்தே நான் என்ன வகையான மனநிலையில் இருக்கிறேன் என்று கண்டுபிடிப்பதில் கெட்டிக்காரி மஞ்சு.
அருகே வந்து அமர்ந்தவள் மடியின் மீது அம்மா பூனை வந்து ஏறிக் கொள்ள, குட்டிகள் அவளின் பாவாடை நுனியை இழுத்து விளையாட, மஞ்சு பெருமையாக என்னைப் பார்த்தாள். கோபத்தினால் சிவந்த முகத்தினை இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் போராடினேன்.
" அப்பா, வள்ளிக்கு கொஞ்சம் சாப்பாடு தாருங்கள்", என்றவள் என் பதிலை எதிர்பாராமல், தட்டின் ஓரத்தில் இருந்த ரொட்டி துண்டினை பூனைக்கு எடுத்து ஊட்டிவிட்டாள்.
வள்ளி இல்லை கொள்ளிவாய் வாய் பிசாசு, என்று மனதில் திட்டியபடியே, மேலோட்டமாக சிரித்து வைத்தேன். நான் சிரித்ததும்  குட்டி கொள்ளிவாய் பிசாசுகள் என் மடியின் மீது தாவி ஏறி, என் முகத்தின் மீது அவற்றின் ஈரமான மூக்கினை உரச, நான் கோபத்தினை அடக்கி கொண்டே சமையல் அறையினை நோக்கி சென்றேன்.

இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமா அல்லது அந்த வள்ளி குடும்பம் இருக்க வேண்டுமா என்று நீயே முடிவு செய்து கொள், என்று கீச்சுக் குரலில் சொன்ன என்னை மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவளின் செய்கை உணர்த்தியது.

எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. நாய், பூனை எல்லாமே காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய விலங்கினங்கள். அதை வீட்டில் அடைத்து வைத்து என்ன கொடுமை என்று அலுத்துக் கொள்வதுண்டு.
இந்த பூனை எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு விபத்து. பக்கத்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்ததை விட எங்கள் வீட்டில்தான் அதிகமாக இருக்க ஆரம்பித்தது. சுவரில் இருக்கும் ஒரு ஓட்டை வழியாக வர ஆரம்பித்தது. அந்த ஓட்டையின் மீது செங்கல்லை வைத்து மூடினேன். நீ பாறாங்கல்லை வைத்தாலும் நான் வந்தே தீருவேன், என்று தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
சொந்த வீட்டில் கிடைத்த மீன் முற்கள், எலும்புத் துண்டுகள், பழைய சோறு இவற்றை விட எங்கள் வீட்டில் கிடைத்த பாலுக்கும், இறைச்சித் துண்டுகளுக்கும் அடிமையாகிப் போனது பூனை. கில்லி என்ற தனது சொந்தப் பெயர் நாளடைவில் மறந்து போனது. எங்கள் வீட்டில் வள்ளல் என்று நாமகரணம் சூட்டினாள் என் மகள். ஒரு நாள் வள்ளல்  வயிற்றை தள்ளிக் கொண்டு நின்ற போது தான் அது பெண் பூனை என்று விளங்கியது. என் முட்டாள் தனத்தினை நானே கடிந்து கொண்டேன். பூனை ஆணா, பெண்ணா என்று தெரியாமல் அதனை வீட்டில் ஏற்றுக் கொண்டது எங்கள் தவறு தான். மகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வள்ளல் என்பது வள்ளி என்று பெயருடன் வலம் வந்தது.


ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் என்று பிறக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் பிரசவ நேரம் வள்ளி செய்யும் அழும்பு தாங்க முடியாது. ஸ்டோர் ரூமில் பிரசவம் ஆனதும் குட்டிகளை வாயில் கவ்வியபடி ஒவ்வொரு அறையாக ஓடித் திரியும். அந்தக் குட்டிகளை உறவினர்கள், நண்பர்கள் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு, அவர்களுக்கு இலவசமாக கொடுத்து முடிப்பதற்குள் எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய்விடும். வள்ளிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வைத்தால் என்னவென்று அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன்.
அதெல்லாம் அதிக செலவு ஆகும், என்று நண்பர்கள் சொன்னார்கள். அதை விட அதை எங்காவது கண் காணாத தூரத்தில் கொண்டு போய் விட்டு வா, என்றார்கள். அதற்கு மகள் ஒத்துக் கொள்ள வேண்டுமே. அவள் கல்லூரிக்கு  அடுத்த மாதம் செல்ல இருக்கிறாள். அதாவது அங்கேயே தங்கி படிக்க இருக்கிறாள். வீட்டிற்கு  மாசத்தில் இரண்டு நாட்கள் வந்து போவதாக ஏற்பாடு. அவள் போனதும் வள்ளிக்கு ஒரு வழி பண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மனைவிக்கும் தெரியாமல் காரியத்தினை கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும். 

குறிப்பிட்ட நாளில் நண்பன் கோணிப் பையுடன் வந்துவிட்டான். அரும்பாடுபட்டு வள்ளி குடும்பத்தினரை பிடித்தாயிற்று. இரண்டு வருடங்களின் முன்பு வள்ளியை கோணிப்பையில் கொண்டு போய் சற்றே தொலைவான இடத்தில் விட்டு விட்டு நான் வீடு வந்து சேரும் முன்னர் வள்ளி வீடு வந்து சேர்ந்தது ஞாபகம் வந்தது. எனக்கே என் மீது எரிச்சல் உண்டானது. அதன் பிறகு அதன் மீது கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது உண்மைதான். வள்ளி மீண்டும் கர்ப்பம் ஆனபோது என் இரக்கம், பச்சாதாபம் எல்லாம் காணாமல் போயிற்று.
*****************

"அப்பா, வள்ளிக்கு என்ன ஆயிற்று?", என்றாள் மகள்.
" அதை ஏன் கேட்கிறாய் செல்லம். ஒரு நாள் ரோட்டில் இறந்து கிடந்திச்சு. யாரோ ஒரு கடன்காரன் ஏதோ ஒரு வாகனத்தினை ஏற்றி கொலை செய்துவிட்டான்", என்றேன் பொய்யான சோகத்துடன்.
வள்ளி ப்ரேம் செய்யப்பட்ட போட்டாவில் என்னை முறைப்பது போல இருந்தது. அதன் பிறகு வள்ளி வரவேயில்லை. நான் அவள் எப்படியாவது வழி கண்டுபிடித்து வந்துவிடுவாள் என்று நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினேன். மகளின் சோகமான முகத்தினை பார்க்க சகிக்காமல், ஒரு கடுவன் பூனை வாங்கி, அதற்கு வள்ளி என்று பெயரிட்டு மகளிடம் கொடுத்தேன்.

4 comments:

  1. நல்ல எழுத்து நடையில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... தலைப்புக்கான காரணம் கதையின் கடைசி வரியில் புரிகிறது. இருந்தாலும் முடிவு மனதில் ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது....

    ReplyDelete
  2. :( உங்க பேச்சு கா வான்ஸ் :( என்னை அழ வச்சிட்டீங்க ..அந்த சம்பவத்தை மாற்றியிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கதைதானே ஏஞ்சல். இதுக்கெலாம் ஃபீல் பண்ணப் படாது.

      Delete
  3. //எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. நாய், பூனை எல்லாமே காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய விலங்கினங்கள். அதை வீட்டில் அடைத்து வைத்து என்ன கொடுமை என்று அலுத்துக் கொள்வதுண்டு.// ம்.. இது எனக்கா!! ;)

    //கடுவன் பூனை வாங்கி, அதற்கு வள்ளி என்று பெயரிட்டு// ஹாஹா!! ;)))))))) முடியேல வான்ஸ். ;)

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!