Friday, July 11, 2014

எம்ப்ராய்டரி வேலைகள்




தங்கப் பறவை: இந்த பறவை தங்க நூல் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கோல்டன் கலர் நூல் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. மற்ற வகை நூல் போல் இல்லாமல் தைப்பதற்கு மிகவும் கஷ்டமான நூல். 
Vanathy's





தங்க நூல் போல் இல்லாமல் இழை போல் இருப்பதால் அடிக்கடி பல இழைகளாக பிரிந்துவிடும். இருந்தாலும் விடாமல் ஒரு டெக்னிக் கண்டு பிடித்து தைத்து முடித்துவிட்டேன். இதில் ஹங்கேரியன், சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்புத் தையல் ஆகிய தையல்கள் பயன்படுத்தினேன்.

























பூக்கள் சாதரண நூலிலும், கோல்டன் நூலிலும் கலந்து தைத்துள்ளேன்.


 அடுத்தது, வண்ணத்துப்பூச்சி, இதில் அந்த வட்ட அவுட் லைன்wheat/wheatear stitch பயன்படுத்தினேன். அடைப்புத் தையல், ஹங்கேரியன், சங்கிலித் தையல், சில மணிகள் கொண்டு உருவான வண்ணத்துப்பூச்சி.


சேவல்: இது பல முறை தைத்த டிசைன் என்றாலும் மிகவும் பிடித்த டிசைன். இந்த முறை பூக்களுக்கு மணிகள் வைத்தேன். 

கடைசியாக இருப்பது சங்கிலித் தையல் கொண்டு உருவான மேசை விரிப்பு. இது போன வருடம் தொடங்கினேன், இன்னும் முடிக்கவில்லை. இதில் சங்கிலித் தையல் மட்டும் பயன்படுத்தி உள்ளேன். ஷேடட் கலர் எனப்படும் 2 வகையான கலர்கள் கலந்த நூல் பயன்படுத்தி உள்ளேன்.

                                                       



Monday, June 30, 2014

இன்றைய பலன்


இன்றைய ராசிபலன் 'மகிழ்ச்சி' என்றிருந்தது எனக்கு. இதைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இன்று ஏதாவது மனதிற்கினிய சம்பவம் நடைபெறப் போகிறதா? தெரியவில்லை.
 நாள் பலன் பார்க்கும் பழக்கம் என் இளமைப் பிராயத்தில், அதாவது என் பதின்ம வயதில் ஏற்பட்டது. சும்மா விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம். நானும் என் சகோதரியும் பள்ளி செல்லும் முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் இன்றைய பலன் என்ற தலைப்பில், அந்தந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்க ஆரம்பித்தோம். குறிப்பாக தேர்வு எழுதும் முன்னர் அன்றைய பலன் என்ன என்று ஆர்வமாக பார்ப்போம்.

"அக்கா, இன்று உனக்கு தோல்வி என்று போட்டிருக்கிறார்கள். கோவிந்தா தான்", என்று தங்கை சொன்னதும் நானும் குழம்பி, என் அம்மா, அப்பாவையும் குழப்பி, என் பெற்றோர்களிடம் அர்ச்சனை வாங்கி பள்ளிக்கு சென்றேன். ஆனால், அதில் குறிப்பிட்டது போல தோல்வியை நான் சந்திக்கவில்லை.  காலையில் இப்படி நெகட்டிவான விடயங்களை பார்ப்பதால் என்ன பலன் என்று நினைத்துக் கொள்வேன். வெற்றி, ஜெயம் என்றிருந்தால் மகிழ்ச்சி கொள்வதும். அதே நேரம் பயம், பதட்டம், கவலை, தோல்வி போன்றவை காணப்பட்டால் கவலை கொள்வதும் என்றிருந்தமையால் நாங்கள் இருவரும் ஒரு முடிவெடுத்தோம். 

அது என்ன முடிவென்றால்-இரவு படுக்க போகும் முன்னர் அன்றைய பலன் என்னவென்று பார்ப்பது என்று. பெரும்பாலும் எந்த மாற்றமும் நடைபெற்றிருக்காது. எங்கள் லூசுத்தனத்தினை எண்ணி நாங்கள் சிரித்துக் கொள்வோம். இருந்தாலும் பலன் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை. சகோதரி அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டாலும் என்னால் முடியவில்லை. 
வார பலன், மாத பலன், வருட பலன் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனோ அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த நாள் பலனில் தான் பெரும் ஈர்ப்பு. 

கிட்டத்தட்ட 15 வருடங்களாக பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளூங்கள். போன மாதம் கூட "மறதி" என்றிருந்தது. என் கணவரிடம் வியந்து போய் சொன்னேன். ஏனெனில் அன்று நான் பால் வாங்க மறந்தது உண்மை தான். அவர் என்னை முறைத்தைபடி சொன்னார், வயதானால் மறதி வருவது இயல்பு தான், என்று. எனக்கு  கோபம் வந்தது. காரணம் அவர் சொல்வது போல எனக்கொன்றும் வயதாகிவிடவில்லை. 

போன கிழமை எனக்கு குரு உக்கிரமாக உலவுதாக போட்டிருந்தார்கள். எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. இருந்தாலும் சிரிப்பு வந்தது. குரு எதற்கு உக்கிரமாக உலவ வேண்டும்?  என்ன சம்பவம் நடந்தாலும் குருவின் உக்கிரம் தான் காரணம் என்று நினைத்தேன். 

ஒரு சம்பவம் சொல்கிறேன், பனி, உறைபனி என்று காலையில் ஒரே பிரச்சினை அன்று. காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். காரில் ஏறினால் 10 நிமிடங்களில் வேலைக்கு போய்விடலாம். ஆனால், அன்று உறைபனி காரணமாக ட்ராஃபிக். ரோடு முழுவதும் உறைபனி. அப்ப தான் எனக்கு அந்த லூசுத்தனமான ஐடியா ஏற்பட்டது. வலது புறம் ஒரு குட்டி ரோடு. அந்த தெருவில் புகுந்தால் வேலைக்கு நேரத்தோடு போய்விடலாம் என்று கணித்தேன். காரினை திருப்பிய பின்னர் கார் வழுக்கி கொண்டெ சென்றது. ப்ரேக்-ஐ அழுத்துகிறேன், அழுத்துகிறேன், அழுத்துகிறேன்....றேன்... என்ன புண்ணியம் கார் நிற்கவில்லை. அந்த தெருவின் முடிவில் இடது புறம் திரும்ப வேண்டும், ஸ்டியரிங்கை ஒடித்து, இடது புறம் திருப்புகிறேன், எதிரில் ஒரு கார், நான் வேகமாக ஒலி எழுப்பியை அழுத்தினேன், அழுத்தினேன்... அந்த நபர் ஜன்னலை திறந்து கெட்ட வார்த்தையில் திட்டிய பின்னர், கெட்ட சைகை காட்டினான். லூசுப் பயலே, கெட்ட வார்த்தை சொன்ன உன் வாயும், கையும் இப்ப கோவிந்தா ஆகப் போகிறது என்று நினைத்தபடி காரினை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினேன். ரோட்டில் கொட்டப்பட்டிருந்த உப்பினால் என் கார் ஒரு நிலைக்கு வந்தது. நடுக்கம் மட்டும் குறையவில்லை. குருவின் உக்கிரம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். 
அப்ப தான் என் தொலைபேசி ஒலித்தது. என் கணவர்  அதே உறைபனியில் வழுக்கிச் சென்று, எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு உக்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள். ஒரே குழப்பமாக இருக்கு. மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கிறேன். இன்று "உறுதி" என்று போட்டிருக்கிறார்கள். கட்டாயம் உறுதியுடன் இருந்து,  மீண்டு விடுவேன்.



Sunday, June 15, 2014

ரேவனும் ட்விங்கியும்


வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்கள்... அதாவது சின்ன சின்ன சந்தோஷங்கள் என்பதன் அளவு கோல் என்ன? சிலருக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தால் அது ஒரு சின்ன சந்தோஷம். சிலருக்கோ அது ஒரு பொருட்டாக இருக்காது. நினைத்தவுடன் கிளம்பி போகும் அளவுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு ஒரு குண்டூசி வாங்கினால் கூட பெரிய சாதனையாக இருக்கும். எனவே சந்தோஷம் என்பது அவரவர் மனதில் தான் உள்ளது. நேற்று வரை எனக்கும் ட்விங்கி என்ற இனிப்பு பண்டம் ஒரு  பெரிய பொருட்டாக தோன்றவில்லை. காசு கொடுத்தால் வாங்கி சாப்பிடலாம் என்ற அளவில் இருந்தது. ஆனால், நான் பணி செய்யும் இடத்தில் குட்டிப்பெண் ரேவனுக்கு அது ஒரு எட்டாக்கனி. 

ரேவன் - ஐந்து வயதான, அழகான குட்டிப் பெண். ஏறத்தாழ பள்ளி ஆண்டு நிறைவுறும் நேரம் வகுப்பில் புதிதாக இணைந்து கொண்டாள். அவள் பெற்றோர் பற்றி பெரிதாக எந்த விபரங்களூம் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. அவளும், அவள் தம்பியும் வேறு ஒருவர் பாரமரிப்பில் இருப்பதாக அறிந்தேன். அவளின் பெற்றோருக்கு என்ன ஆச்சு, என்ற விபரம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எழவில்லை. வெளிநாடுகளில் Foster homes எனப்படும் குடும்பங்கள் நிறைய இருக்கிறார்கள். சிலர் பராமரிக்கும் குழந்தைகளை தத்தெடுப்பதும் உண்டு. சில குழந்தைகள் அடிக்கடி ஒரு குடும்பத்தில் இருந்து வேறு குடும்பம், பின்னர் வேறு குடும்பம் என்று சென்று கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் அன்பிற்காக மிகவும் ஏங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒன்று தான் ரேவன். நீலக் கண்கள், தங்க நிறத்தில் மினுங்கும் தலை முடி,  பார்த்தவுடன் ஒட்டிக் கொள்ளும் அழகிய சிரிப்பு என்று என் மனதில் மெதுவாக இடம் பிடித்தாள் ரேவன்.
பள்ளியில் ஒரு நாள்  கேக் walk எனப்படும் ஒரு விளையாட்டு. அதில் வென்றவர்கள் பிஸ்கட் அல்லது ட்விங்கி எனப்படும் ஸ்நாக், இதில் ஒன்றினை சாப்பிடலாம். கண்டிப்பாக ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான். ரேவன் ட்விங்கி எடுத்துக் கொண்டாள். அதனை மிகவும் ரசித்து சாப்பிட்டு முடித்தவள் மிச்சம் இருந்த ட்விங்கிகளை ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மேலதிகமாக ஒரு ட்விங்கி எடுத்தால் காட்டிக் கொடுக்க நிறைய எட்டப்பன்கள் இருக்கும் உலகம் என்பது ரேவனுக்கு தெரிந்திருந்தது. மெதுவாக என்னிடம் வந்தாள்.
"ஹாய்", என்றாள்.
" ஹலோ ரேவன்", இது நான்.
" நான் ஃபாஸ்டர் ஹோமில் இருக்கிறேன். உனக்குத் தெரியுமா?", என்றாள் ரேவன்.
"ம்ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்", என்றேன் அவள் முகத்தருகே குனிந்து.
" இது என் ஐந்தாவது ஹோம். வாரத்தில் ஒரு நாள் என் அன்னையை பார்ப்பேன்", என்றாள்.
எனக்கு மனம் கனத்துப் போனது. அவளின் அம்மா  ரேவனை அடித்து துன்புறுத்துவதால் தான் இவள் ஃபாஸ்டர் ஹோமில் இருப்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
" ரேவன், உனக்கு இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா?", என்றேன் பேச்சினை மாற்றும் விதமாக.
"ம்ம்.. இந்த ஸ்கூல் பிறகு அந்த ட்விங்கி எல்லாமே பிடிச்சிருக்கு", என்றாள்.
என்னது ட்விங்கியா?
"ப்ளீஸ் எனக்கு ஒரு ட்விங்கி தருவாயா?", என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ரேவன்.

என் இயலாமையை எண்ணி வருத்தப்பட்டேன். இவள் ஒருத்திக்கு எப்படி நான்  ட்விங்கி மேலதிகமாக ஒன்று தர முடியும். சுற்றிலும் மாணவர்கள் இருந்தார்கள். சிலர் ட்விங்கி மீதும், வேறு சிலர் பிஸ்கட் மீதும் வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ரேவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
என் இயலாமையை எண்ணி நொந்து கொண்டேன். அவள் கண்களை பார்க்கும் தைரியம் இல்லாமல் வேறு எங்கோ பார்த்தபடி,  ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான், என்று மெல்லிய குரலில் சொன்னேன். அதன் பிறகு அவள் பேசவில்லை. என் பக்கத்தில் இருந்து நகரவும் இல்லை. நான் எப்படியாவது அவளுக்கு ஒரு ட்விங்கியாவது தந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தாளா, என்றும்  புலப்படவில்லை. 
அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் ரேவனும், ட்விங்கியும் தான் தெரிந்தார்கள். மறுநாள் கூட வேலை செய்யும் ஆசிரியையிடம் சொன்னேன்.
முதல் பிரச்சினை, ரேவனுக்கு மட்டும் ட்விங்கி கொடுத்து மற்றவர்களுக்கு எப்படி கொடுக்காமல் விடுவது, என்றார் ஆசிரியை. அதுவும் சரிதான். எது எப்படியோ நான் கட்டாயம் ரேவனுக்கு ட்விங்கி கொடுத்தே ஆக வேண்டும். அதே நேரம் வளர்ப்பு பெற்றோரின் மனமும் கஸ்டப்படக்கூடாது. நாங்கள் என்ன ட்விங்கி வாங்க கூட வசதி, வக்கில்லாத குடும்பமா?, என்று அவர்கள் நினைத்தால். 
*******
நான் பெட்டியில் இருந்த ட்விங்கிகளை ஒரு ஷாப்பிங் பையில் போட்டுக் கொண்டேன். யாருக்கும் பையில் என்ன இருக்கு என்று தெரிய வாய்ப்பில்லை அல்லவா? 
ரேவனின் வளர்ப்பு தாயார் வந்ததும் ரேவன் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். 
அவளிடம் அந்தப் பையினை நீட்டினேன். புதிராகப் பார்த்தாள்.
" ரேவன் டார்லிங், உள்ளே என்ன இருக்கு என்று பார்", என்றேன்.
அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தது.
" ரேவன், அன்று கேக் walk  விளையாடினோம் அல்லவா? அன்று மீந்து போன ட்விங்கிகள் தான் இவை", என்றேன். 
" அன்று எதுவும் மிஞ்ச...", என்று அவள் முடிக்கும் முன்னர் நான் முந்திக் கொண்டேன். எவ்வளவு கவனமாக அவதானித்திருக்கிறாள். மெதுவாக கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். கண்களை சிமிட்டி விட்டு நகர்ந்தாள். அந்த கண் சிமிட்டலின் அர்த்தம் என்ன? எனக்கு எல்லாம் தெரியும் என்கிறாளா?

( இது ஒரு உண்மைக் கதை. இதில் வரும் ரேவன், ட்விங்கி(!) எல்லாமே உண்மைக் கதாபாத்திரங்களே! )