Sunday, June 15, 2014

ரேவனும் ட்விங்கியும்


வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்கள்... அதாவது சின்ன சின்ன சந்தோஷங்கள் என்பதன் அளவு கோல் என்ன? சிலருக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தால் அது ஒரு சின்ன சந்தோஷம். சிலருக்கோ அது ஒரு பொருட்டாக இருக்காது. நினைத்தவுடன் கிளம்பி போகும் அளவுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு ஒரு குண்டூசி வாங்கினால் கூட பெரிய சாதனையாக இருக்கும். எனவே சந்தோஷம் என்பது அவரவர் மனதில் தான் உள்ளது. நேற்று வரை எனக்கும் ட்விங்கி என்ற இனிப்பு பண்டம் ஒரு  பெரிய பொருட்டாக தோன்றவில்லை. காசு கொடுத்தால் வாங்கி சாப்பிடலாம் என்ற அளவில் இருந்தது. ஆனால், நான் பணி செய்யும் இடத்தில் குட்டிப்பெண் ரேவனுக்கு அது ஒரு எட்டாக்கனி. 

ரேவன் - ஐந்து வயதான, அழகான குட்டிப் பெண். ஏறத்தாழ பள்ளி ஆண்டு நிறைவுறும் நேரம் வகுப்பில் புதிதாக இணைந்து கொண்டாள். அவள் பெற்றோர் பற்றி பெரிதாக எந்த விபரங்களூம் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. அவளும், அவள் தம்பியும் வேறு ஒருவர் பாரமரிப்பில் இருப்பதாக அறிந்தேன். அவளின் பெற்றோருக்கு என்ன ஆச்சு, என்ற விபரம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எழவில்லை. வெளிநாடுகளில் Foster homes எனப்படும் குடும்பங்கள் நிறைய இருக்கிறார்கள். சிலர் பராமரிக்கும் குழந்தைகளை தத்தெடுப்பதும் உண்டு. சில குழந்தைகள் அடிக்கடி ஒரு குடும்பத்தில் இருந்து வேறு குடும்பம், பின்னர் வேறு குடும்பம் என்று சென்று கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் அன்பிற்காக மிகவும் ஏங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒன்று தான் ரேவன். நீலக் கண்கள், தங்க நிறத்தில் மினுங்கும் தலை முடி,  பார்த்தவுடன் ஒட்டிக் கொள்ளும் அழகிய சிரிப்பு என்று என் மனதில் மெதுவாக இடம் பிடித்தாள் ரேவன்.
பள்ளியில் ஒரு நாள்  கேக் walk எனப்படும் ஒரு விளையாட்டு. அதில் வென்றவர்கள் பிஸ்கட் அல்லது ட்விங்கி எனப்படும் ஸ்நாக், இதில் ஒன்றினை சாப்பிடலாம். கண்டிப்பாக ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான். ரேவன் ட்விங்கி எடுத்துக் கொண்டாள். அதனை மிகவும் ரசித்து சாப்பிட்டு முடித்தவள் மிச்சம் இருந்த ட்விங்கிகளை ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மேலதிகமாக ஒரு ட்விங்கி எடுத்தால் காட்டிக் கொடுக்க நிறைய எட்டப்பன்கள் இருக்கும் உலகம் என்பது ரேவனுக்கு தெரிந்திருந்தது. மெதுவாக என்னிடம் வந்தாள்.
"ஹாய்", என்றாள்.
" ஹலோ ரேவன்", இது நான்.
" நான் ஃபாஸ்டர் ஹோமில் இருக்கிறேன். உனக்குத் தெரியுமா?", என்றாள் ரேவன்.
"ம்ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்", என்றேன் அவள் முகத்தருகே குனிந்து.
" இது என் ஐந்தாவது ஹோம். வாரத்தில் ஒரு நாள் என் அன்னையை பார்ப்பேன்", என்றாள்.
எனக்கு மனம் கனத்துப் போனது. அவளின் அம்மா  ரேவனை அடித்து துன்புறுத்துவதால் தான் இவள் ஃபாஸ்டர் ஹோமில் இருப்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
" ரேவன், உனக்கு இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா?", என்றேன் பேச்சினை மாற்றும் விதமாக.
"ம்ம்.. இந்த ஸ்கூல் பிறகு அந்த ட்விங்கி எல்லாமே பிடிச்சிருக்கு", என்றாள்.
என்னது ட்விங்கியா?
"ப்ளீஸ் எனக்கு ஒரு ட்விங்கி தருவாயா?", என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ரேவன்.

என் இயலாமையை எண்ணி வருத்தப்பட்டேன். இவள் ஒருத்திக்கு எப்படி நான்  ட்விங்கி மேலதிகமாக ஒன்று தர முடியும். சுற்றிலும் மாணவர்கள் இருந்தார்கள். சிலர் ட்விங்கி மீதும், வேறு சிலர் பிஸ்கட் மீதும் வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ரேவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
என் இயலாமையை எண்ணி நொந்து கொண்டேன். அவள் கண்களை பார்க்கும் தைரியம் இல்லாமல் வேறு எங்கோ பார்த்தபடி,  ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான், என்று மெல்லிய குரலில் சொன்னேன். அதன் பிறகு அவள் பேசவில்லை. என் பக்கத்தில் இருந்து நகரவும் இல்லை. நான் எப்படியாவது அவளுக்கு ஒரு ட்விங்கியாவது தந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தாளா, என்றும்  புலப்படவில்லை. 
அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் ரேவனும், ட்விங்கியும் தான் தெரிந்தார்கள். மறுநாள் கூட வேலை செய்யும் ஆசிரியையிடம் சொன்னேன்.
முதல் பிரச்சினை, ரேவனுக்கு மட்டும் ட்விங்கி கொடுத்து மற்றவர்களுக்கு எப்படி கொடுக்காமல் விடுவது, என்றார் ஆசிரியை. அதுவும் சரிதான். எது எப்படியோ நான் கட்டாயம் ரேவனுக்கு ட்விங்கி கொடுத்தே ஆக வேண்டும். அதே நேரம் வளர்ப்பு பெற்றோரின் மனமும் கஸ்டப்படக்கூடாது. நாங்கள் என்ன ட்விங்கி வாங்க கூட வசதி, வக்கில்லாத குடும்பமா?, என்று அவர்கள் நினைத்தால். 
*******
நான் பெட்டியில் இருந்த ட்விங்கிகளை ஒரு ஷாப்பிங் பையில் போட்டுக் கொண்டேன். யாருக்கும் பையில் என்ன இருக்கு என்று தெரிய வாய்ப்பில்லை அல்லவா? 
ரேவனின் வளர்ப்பு தாயார் வந்ததும் ரேவன் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். 
அவளிடம் அந்தப் பையினை நீட்டினேன். புதிராகப் பார்த்தாள்.
" ரேவன் டார்லிங், உள்ளே என்ன இருக்கு என்று பார்", என்றேன்.
அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தது.
" ரேவன், அன்று கேக் walk  விளையாடினோம் அல்லவா? அன்று மீந்து போன ட்விங்கிகள் தான் இவை", என்றேன். 
" அன்று எதுவும் மிஞ்ச...", என்று அவள் முடிக்கும் முன்னர் நான் முந்திக் கொண்டேன். எவ்வளவு கவனமாக அவதானித்திருக்கிறாள். மெதுவாக கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். கண்களை சிமிட்டி விட்டு நகர்ந்தாள். அந்த கண் சிமிட்டலின் அர்த்தம் என்ன? எனக்கு எல்லாம் தெரியும் என்கிறாளா?

( இது ஒரு உண்மைக் கதை. இதில் வரும் ரேவன், ட்விங்கி(!) எல்லாமே உண்மைக் கதாபாத்திரங்களே! )

3 comments:

  1. ம்ம்ம்ம் மனம் கனக்கும் கதை. வெளிநாட்டில் இது சகஜமான கதையாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள், குழந்தைகள்தானே.. அவர்களுக்கும் எவ்வளவோ ஏக்கம் ஆசை இருக்கும்தானே.. இதை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை.

    உண்மைதான் வான்ஸ்ஸ்.. சின்ன சின்ன சந்தோசங்கள்தான் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.

    அவரவர்க்கு எது விருப்பமோ அதைத்தான் கொடுக்க வேண்டும். சொக்கலேட்டை விரும்பும் குழந்தைக்க,ு ஒரு தங்க மோதிரம் கொடுப்பதால் மகிழ்ச்சி கிடைக்காது.

    ReplyDelete
  2. ;((

    இங்கும் நிறைய ரேவன்ஸ், நிறைய ட்விங்கீஸ். ஸ்கூல்ல வேலையில் இருந்தால் சந்தோஷங்களோட இது இலவச இணைப்பு போல.;(

    எங்களால முடிஞ்ச வரைக்கும் சின்னதாக என்னவாவது செய்யலாம். பல சமயம் பார்த்துப் பெருமூச்சு விடுறதைத் தவிர வேற ஒண்டும் செய்ய ஏலுறது இல்லை. ;(

    ReplyDelete
  3. மனம் கனத்துப்போகிறது இப்படியான குழந்தைகளைப் பார்க்கையில்! ஹ்ம்ம்ம்...!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!