Monday, June 30, 2014

இன்றைய பலன்


இன்றைய ராசிபலன் 'மகிழ்ச்சி' என்றிருந்தது எனக்கு. இதைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இன்று ஏதாவது மனதிற்கினிய சம்பவம் நடைபெறப் போகிறதா? தெரியவில்லை.
 நாள் பலன் பார்க்கும் பழக்கம் என் இளமைப் பிராயத்தில், அதாவது என் பதின்ம வயதில் ஏற்பட்டது. சும்மா விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம். நானும் என் சகோதரியும் பள்ளி செல்லும் முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் இன்றைய பலன் என்ற தலைப்பில், அந்தந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்க ஆரம்பித்தோம். குறிப்பாக தேர்வு எழுதும் முன்னர் அன்றைய பலன் என்ன என்று ஆர்வமாக பார்ப்போம்.

"அக்கா, இன்று உனக்கு தோல்வி என்று போட்டிருக்கிறார்கள். கோவிந்தா தான்", என்று தங்கை சொன்னதும் நானும் குழம்பி, என் அம்மா, அப்பாவையும் குழப்பி, என் பெற்றோர்களிடம் அர்ச்சனை வாங்கி பள்ளிக்கு சென்றேன். ஆனால், அதில் குறிப்பிட்டது போல தோல்வியை நான் சந்திக்கவில்லை.  காலையில் இப்படி நெகட்டிவான விடயங்களை பார்ப்பதால் என்ன பலன் என்று நினைத்துக் கொள்வேன். வெற்றி, ஜெயம் என்றிருந்தால் மகிழ்ச்சி கொள்வதும். அதே நேரம் பயம், பதட்டம், கவலை, தோல்வி போன்றவை காணப்பட்டால் கவலை கொள்வதும் என்றிருந்தமையால் நாங்கள் இருவரும் ஒரு முடிவெடுத்தோம். 

அது என்ன முடிவென்றால்-இரவு படுக்க போகும் முன்னர் அன்றைய பலன் என்னவென்று பார்ப்பது என்று. பெரும்பாலும் எந்த மாற்றமும் நடைபெற்றிருக்காது. எங்கள் லூசுத்தனத்தினை எண்ணி நாங்கள் சிரித்துக் கொள்வோம். இருந்தாலும் பலன் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை. சகோதரி அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டாலும் என்னால் முடியவில்லை. 
வார பலன், மாத பலன், வருட பலன் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனோ அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த நாள் பலனில் தான் பெரும் ஈர்ப்பு. 

கிட்டத்தட்ட 15 வருடங்களாக பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளூங்கள். போன மாதம் கூட "மறதி" என்றிருந்தது. என் கணவரிடம் வியந்து போய் சொன்னேன். ஏனெனில் அன்று நான் பால் வாங்க மறந்தது உண்மை தான். அவர் என்னை முறைத்தைபடி சொன்னார், வயதானால் மறதி வருவது இயல்பு தான், என்று. எனக்கு  கோபம் வந்தது. காரணம் அவர் சொல்வது போல எனக்கொன்றும் வயதாகிவிடவில்லை. 

போன கிழமை எனக்கு குரு க்கிரமாக உலவுதாக போட்டிருந்தார்கள். எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. இருந்தாலும் சிரிப்பு வந்தது. குரு எதற்கு க்கிரமாக உலவ வேண்டும்?  என்ன சம்பவம் நடந்தாலும் குருவின் க்கிரம் தான் காரணம் என்று நினைத்தேன். 

ஒரு சம்பவம் சொல்கிறேன், பனி, உறைபனி என்று காலையில் ஒரே பிரச்சினை அன்று. காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். காரில் ஏறினால் 10 நிமிடங்களில் வேலைக்கு போய்விடலாம். ஆனால், அன்று உறைபனி காரணமாக ட்ராஃபிக். ரோடு முழுவதும் உறைபனி. அப்ப தான் எனக்கு அந்த லூசுத்தனமான ஐடியா ஏற்பட்டது. வலது புறம் ஒரு குட்டி ரோடு. அந்த தெருவில் புகுந்தால் வேலைக்கு நேரத்தோடு போய்விடலாம் என்று கணித்தேன். காரினை திருப்பிய பின்னர் கார் வழுக்கி கொண்டெ சென்றது. ப்ரேக்-ஐ அழுத்துகிறேன், அழுத்துகிறேன், அழுத்துகிறேன்....றேன்... என்ன புண்ணியம் கார் நிற்கவில்லை. அந்த தெருவின் முடிவில் இடது புறம் திரும்ப வேண்டும், ஸ்டியரிங்கை ஒடித்து, இடது புறம் திருப்புகிறேன், எதிரில் ஒரு கார், நான் வேகமாக ஒலி எழுப்பியை அழுத்தினேன், அழுத்தினேன்... அந்த நபர் ஜன்னலை திறந்து கெட்ட வார்த்தையில் திட்டிய பின்னர், கெட்ட சைகை காட்டினான். லூசுப் பயலே, கெட்ட வார்த்தை சொன்ன உன் வாயும், கையும் இப்ப கோவிந்தா ஆகப் போகிறது என்று நினைத்தபடி காரினை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினேன். ரோட்டில் கொட்டப்பட்டிருந்த உப்பினால் என் கார் ஒரு நிலைக்கு வந்தது. நடுக்கம் மட்டும் குறையவில்லை. குருவின் க்கிரம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். 
அப்ப தான் என் தொலைபேசி ஒலித்தது. என் கணவர்  அதே உறைபனியில் வழுக்கிச் சென்று, எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு க்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள். ஒரே குழப்பமாக இருக்கு. மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கிறேன். இன்று "உறுதி" என்று போட்டிருக்கிறார்கள். கட்டாயம் உறுதியுடன் இருந்து,  மீண்டு விடுவேன்.



3 comments:

  1. வணக்கம்
    ///எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு உக்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள்.////
    இராசி பலன் நல்லாத்தான் வேலை செய்திருக்குப்போல....எல்லாவற்றுக்கும் நம்பிகைதான் வாழ்க்கை...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஹஹ! நல்ல பதிவு வானதி! எனக்கு ஊரில தினசரி கேலண்டர் கிழிக்கும் வரை பார்க்கும் வழக்கம் இருந்தது, ஆனா பாத்த உடனே மறந்தும் போயிரும். இங்கே வந்தபிறகு சுத்தமா மறந்துபோச்! என்னவர் தினமும் யாஹூ அஸ்ட்ராலஜி பார்ப்பார், அவருக்கு கரெக்டான பலனும் போட்டிருக்கும் அதில். :)

    உறுதியா மீண்டுவர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ;)) உக்கிரமாக உறுதியாக இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வாழ்த்துக்கள்.

    எல்லோரும் சுகமாக இருக்கிறீங்கள் என்று நம்புறன். பத்திரம் வானதி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!