Sunday, September 13, 2015

நானும் பள்ளிக்கு போறேன்....

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறேன். அஞ்சு, இமா இருவரும் என்னை ஃபேஸ் புக்கில் தேடி மெயில் அனுப்பினார்கள். அவர்களுக்கு பதில் அனுப்பியதோடு சரி. பிறகு எனக்கு ஒரு ப்ளாக் இருக்கு என்ற ஞாபகம் அப்ப அப்ப வரும். பிறகு மறந்தும் விடும். சரி இப்ப விஷயத்திற்கு வருவோம். என் நாடோடி வாழ்க்கையில் நான் கற்றவை எதுவும் என்னை அமெரிக்காவில் வேலை தேட அனுமதிக்கவில்லை/கிடைக்கவில்லை. அதோடு நீண்ட நாட்களாக வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்த்தபடியால் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாச்சு. என் மகள் பள்ளி போகத் தொடங்கியதும், நானும் அதே பள்ளியில் வாலண்டியராக சேர்ந்தேன். சும்மா பேருக்கு... அதாவது எங்கம்மாவும் சந்தைக்குப் போகின்றா, என்று இல்லாமல் முழு மனதுடன் என் பங்களிப்பினை செய்தேன்.

சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக என் பங்களிப்பினை பார்த்து வியந்து, என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள். வாலண்டியராக மிகவும் சிறப்பாக பணி புரிந்த நான், ஒரு வேலை கிடைத்ததும் இன்னும் சிறப்பாக பணி செய்தேன். உதவி ஆசிரியை பணி. மிகவும் ரசித்து, அனுபவித்து செய்கிறேன். அப்போது தான் என்னுள் தூங்கிக் கொண்டிருந்த  சிங்கத்தினை யாரோ உசுப்பி எழுப்பி விட்டார்கள். நீ மீண்டும் கல்லூரிக்கு போய் படித்து, ஆசிரியை ஆக வர வேண்டும் என்றார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா? என் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றேன். நீ கல்லூரிக்கு போ, நாங்கள் இருக்கிறோம் உதவி செய்வோம் என்றார்கள். நானும் அதை நம்பி, தேவையான சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து, முட்டி மோதி கல்லூரிக்கு சேர்ந்தாயிற்று. மிகவும் பெரிய ப்ராஸஸ் அது. அதை எழுத நான்கு பதிவுகள் வேண்டும்.

முதல் நாள் வகுப்பு, எனக்கு கண்களை கட்டி காட்டில் விட்டாற் போல ஒரு உணர்வு. எழுந்து ஓடி விடலாமா, என்று நினைத்து பிறகு ஒருவாறு அமர்ந்து பாடத்தினை கவனித்தேன். நிறைய படிக்க வேண்டும், அஸைன்மென்ட், பரீட்சைகள் என்று ஒரே டென்ஷன். எனக்கு உதவி செய்வேன் என்றவர்கள் யாரையும் காணவில்லை. வின்டர் ஆரம்பித்தால் அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படும் பிள்ளைகளையும் கவனித்து, பாடத்தினையும் படித்து, ஒருவாறு தேறினேன். பிறகு அடுத்த செமஸ்டர். மீண்டும் டென்ஷன். வின்டர் முடிந்து வசந்த காலம். மீண்டும் சளி, காய்ச்சல் என்று ஒரே அக்கப்போர் தான். இந்த முறை என்னையும் சேர்த்து சளி பிடித்துக் கொண்டது. அதற்கு மருத்துவரைப் பார்த்து, மருந்துகள் உட்கொண்டு... ஒரு நாள் மிகவும் உடைந்து போய் வேலையில் அழ ஆரம்பித்து விட்டேன்.

நீ முற்பிறவியில் செய்த பலனை இப்பிறவியில் அனுபவிப்பாய் என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. என்னுடன் வேலை பார்த்த நாடலி, லீசா இருவரும் என்னை அணைத்து ஆறுதல் சொன்னார்கள். அதோடு எனக்கு அஸைன்மென்ட் செய்ய உதவி செய்வார்கள். நீ எதற்கும் கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில் இன்னும் நிறைய நட்புக்கள் இருக்கிறார்கள்.

என்ன நடந்தாலும் படிப்பதை மட்டும் விட்டு விடாதே என்பார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று அடிக்கடி நினைப்பேன். தற்போது இரண்டு பாடங்கள் எடுப்பதால், வேலையில் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். நான் வேலையினை விட்டு நின்றுவிடுகிறேன், உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. வேறு யாராவது முழு நேர உதவி ஆசிரியை இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றேன். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அதன்படி வேறு ஒருவரை பகுதி நேர பணியாளராக சேர்த்திருக்கிறார்கள்.  பள்ளி அதிபரிடம் மிகவும் போராடி நடந்த ஒரு நிகழ்ச்சி. உற்ற நண்பர்கள் இருந்தால் மலையும் கூட கடுகளவு என்பார்கள் என்பதை என் அனுபவத்தின் ஊடாக அறிந்தேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்....

Saturday, October 11, 2014

இனிய நினைவுகளா? கிருமிகளா?

   
 பல மாதங்களின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறேன். காரணம்.....நேரம் வரும்போது அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். இனிமேல் முன்பு போல வர முடியுமா என்று தெரியவில்லை. முன்பு போல அதிரா, இமா, அஞ்சு, மகி, ஜெய்லானி போன்றவர்கள் பதிவுகள் எழுதுவதில்லையா? அல்லது என் ரீடரில் தான் எதுவும் பிரச்சினையா? என்னை முகபுத்தகத்தில் விசாரித்த ஏஞ்சலினுக்கு என் அன்புகள். என்னைக் காணாவிட்டால் இவரிடரிடமிருந்து மெஸேஜ் கட்டாயம் வரும்.
************************
                   என்னுடன் வேலை செய்யும் திருமதி. பார்பரா அவர்களின் கணவர் இறந்துவிட்டார். இவர் வேலையால் வீட்டுக்கு போனபோது அவர் உயிருடன் இல்லையாம். மாரடைப்பினால் இறந்துவிட்டார். பார்பரா கணவர் இறந்த தகவலை முகபுத்தகத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அப்டேட் செய்திருந்தார், என்று வேறு ஒரு நண்பி சொன்னார். இதனால் பல உறவினர்கள் இவரைக் குடைந்து கேள்விகள் கேட்காமல், முகபுத்தகத்தினை படித்து எல்லா தகவல்களையும் அறிந்து கொண்டார்களாம்.


                   வேலை செய்பவர்கள் எல்லோரும் அவரின் உடலை பார்வையிட செல்வதாக சொன்னார்கள். நானும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தேன். உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம். காரணம், நான் பிறந்தது முதல் இறப்பு வீட்டுக்கு சென்றதே இல்லை. நான்  சிறுமியாக இருந்தபோது என் மாமாவின் இறப்பு. அதுவே நான் சென்ற முதலும் கடைசியுமான சாவு வீடு. அதுவும் பெரும்பாலும் விளையாட்டில் கழிந்தது. இரவு வந்தபோது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. மாமாவை நடு வீட்டில் வைத்திருந்தார்கள். சுற்றிலும் உறவினர்கள். இரவு எல்லோரும் தூங்கிவிட நான் மட்டும் கண்களை இறுக மூடியபடி இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் என் வாழ்க்கை வெளிநாட்டில் கழிகின்றது. என் தாத்தா, அம்மாச்சி, மாமா இவர்களின் இறுதிப் பயணத்திற்கும் நான் ஊரில் இருக்கவில்லை.

இது நான் செல்லும் இரண்டாவது இறப்பு வீடு. இங்கு வீடு என்பது அவரின் சொந்த வீடு அல்ல. Funeral homes எனப்படும் வீடுகளில் உடலை வைத்திருப்பார்கள். அங்கிருந்து தான் அவரின் இறுதிப்பயணம் தொடங்கும்.

நான், என்னோடு வேலை செய்யும் நாடலி மற்றும் வேறு சிலரோடு, நாடலியின் காரில் போவதாக ஏற்பாடு. பெரும்பாலும் எல்லோரும் கறுப்பு உடைகளில் காணப்பட்டார்கள். ஒரு வரிசையில் காத்திருந்து, மெதுவாக உள்ளே சென்றோம். அங்கு ஒரு நோட்டில், பெயர், வீட்டு முகவரி எழுதி விட்டு, உள்ளே போனோம். வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள். நகரக் கூட இடம் இருக்கவில்லை. பார்பரா வந்து எல்லோரையும் கட்டி அணைத்து வரவேற்றார். எங்காவது ஒரு மூளையில் இருந்து கதறி அழுது கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு போன எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த எல்லோரும் இறந்தவரின் பெருமைகளை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 நான் பயப்பட்டது போல அவரின் உடலை நடு வீட்டில் வைத்திருக்கவில்லை. ஒரு ஓரமாக, விரும்பியவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம் என்பது போல ஏற்பாடு. என்னோடு வந்தவர்கள் யாரும் அந்தப்பக்கம் போகவில்லை.

அங்கு போய் வந்ததிலிருந்து  நான் அடிக்கடி இதே நினைவாக இருக்கிறேன். இவர்களின் முறை சரியா? இறந்தவர் கட்டிய வீடு- அதிலிருந்து அல்லவா அவரின் இறுதிப்பயணம் தொடங்க வேண்டும். இறந்தவரின் உடலில் தொற்றுக் கிருமிகள் இருக்கும் என்று காரணம் சொன்னாலும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தாத்தா, பாட்டி, மாமா எல்லோருடைய இறுதிப்பயணமும் எங்கள் ஊர் வீட்டிலிருந்து தான் நடைபெற்றது. எந்தவிதமான கிருமிகளையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.
இனிய நினைவுகளை மட்டும் தான் விட்டுச் சென்றார்கள். 


Friday, July 11, 2014

எம்ப்ராய்டரி வேலைகள்
தங்கப் பறவை: இந்த பறவை தங்க நூல் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கோல்டன் கலர் நூல் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. மற்ற வகை நூல் போல் இல்லாமல் தைப்பதற்கு மிகவும் கஷ்டமான நூல். 
Vanathy's

தங்க நூல் போல் இல்லாமல் இழை போல் இருப்பதால் அடிக்கடி பல இழைகளாக பிரிந்துவிடும். இருந்தாலும் விடாமல் ஒரு டெக்னிக் கண்டு பிடித்து தைத்து முடித்துவிட்டேன். இதில் ஹங்கேரியன், சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்புத் தையல் ஆகிய தையல்கள் பயன்படுத்தினேன்.

பூக்கள் சாதரண நூலிலும், கோல்டன் நூலிலும் கலந்து தைத்துள்ளேன்.


 அடுத்தது, வண்ணத்துப்பூச்சி, இதில் அந்த வட்ட அவுட் லைன்wheat/wheatear stitch பயன்டுத்தினேன். அடைப்புத் தையல், ஹங்கேரியன், சங்கிலித் தையல், சில மணிகள் கொண்டு உருவான வண்ணத்துப்பூச்சி.


சேவல்: இது பல முறை தைத்த டிசைன் என்றாலும் மிகவும் பிடித்த டிசைன். இந்த முறை பூக்களுக்கு மணிகள் வைத்தேன். 

கடைசியாக இருப்பது சங்கிலித் தையல் கொண்டு உருவான மேசை விரிப்பு. இது போன வருடம் தொடங்கினேன், இன்னும் முடிக்கவில்லை. இதில் சங்கிலித் தையல் மட்டும் பயன்படுத்தி உள்ளேன். ஷேடட் கலர் எனப்படும் 2 வகையான கலர்கள் கலந்த நூல் பயன்படுத்தி உள்ளேன்.