Saturday, June 12, 2010

ஒன்றுகூடல் ( கெட்டுகெதர் )

அடுத்து வருவது கெட்டுகெதர்.

இடம் : நீங்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்காத இடம்.

யார் வருவார்கள் : அது சஸ்பென்ஸ்

சாப்பாடு : கட்டாயம் தங்ஸின் இட்லி உண்டு. மேலும் பல உணவுகள் உண்டு.

காத்திருங்கள்!!!!!!!

Thursday, June 10, 2010

என் உயிர் நீதான்!

ஜூன், 2009
***********
மாலை ஆறு மணி. வேலையால் வந்து கதவைத் திறந்து உள்ளே போனான் ரமேஷ்.

" திவ்யா, என்ன சாப்பாடு செய்ய ?. ரோஸ்டட் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாயே. இதோ இன்னும் 1/2 மணி நேரத்தில் சமையல் முடிச்சுடுவேன். " என்றான் மனைவியிடம்.

( 45 நிமிடங்களின் பிறகு )
" திவ்யா, நல்லா சாப்பிடும்மா. குழம்பு நல்ல இருக்கா. இன்னும் கொஞ்சம் மீன் எடும்மா. சாப்பிட்டு முடிஞ்சதும் நீ டி.வி பாரும்மா. நான் பாத்திரங்கள், சமையல் மேடை க்ளீன் பண்ணி விட்டு வருகிறேன். "
ரமேஷ் : குட்நைட், திவ்யா.

ஜூன், 2008
***************
ரமேஷ் : திவ்யா, எங்க இருக்கே?
திவ்யா : இதோ இங்கே ரூமில்.
ரமேஷ் : ஏன் உடம்பு சரியில்லையா? இந்த நேரம் படுக்கமாட்டாயே.
திவ்யா : வேலை கொஞ்சம் அதிகம். தலைவலி உயிர் போகுது.
ரமேஷ் : இதோ இஞ்சி டீ போட்டுத் தருகிறேன். குடிச்சுட்டு நல்லா ரெஸ்ட் எடுடா.
திவ்யா: தாங்ஸ்.

டீயை சுவைத்துக் கொண்டே உற்சாகமாக பேசினாள் திவ்யா.

ரமேஷ், டேக்கேரில் எவ்வளவு அழகான குழந்தைகள் தெரியுமா? ஒவ்வொரு நாளும் பார்க்கவே அலுப்புத் தட்டாது. குண்டுக் கன்னங்கள், அழகிய கண்கள்... ஒவ்வொரு குழந்தையும் பூக்கள் போல கொள்ளை அழகு. நேற்று புதுசா ஒரு குழந்தை வந்திச்சு. பிறந்து 6 வாரம் தான். மெத்து மெத்தென்று பஞ்சு போல அவ்வளவு மென்மை. அழுது கொண்டே இருந்த குழந்தையை நான் தூக்கியதும் அமைதி ஆகி விட்டது "

வேலையில் நடந்தவற்றை அப்படியே வந்து ரமேஷுக்கு வாய் ஓயாமல் சொல்வாள். ரமேஷூக்கு அலுப்புத் தட்டாது. கல்யாணமாகி 3 வருடங்களாகி விட்டது. குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் எப்போது திவ்யாவுக்கு உண்டு. ரமேஷ் ஆறுதல் சொல்வான்.


ஜூலை 10, 2008
****************
ரமேஷ் : வேலைக்கு நேரமாச்சு நான் போறேன். இரவு எதுவுமே சமைக்க வேண்டாம். வெளியே போய் சாப்பிடலாம். சரியாடா?
திவ்யா : ம்ம்ம்..

ரமேஷ் எப்போதும் ட்ரெயினில் தான் வேலைக்குப் போவான். காரில் போவதென்றால் ட்ராஃபிக் என்று 30 நிமிடப் பயணம் 1 மணி நேரத்திற்கு அதிகமாகி விடும். ட்ரெயினில் ஏதாவது புக்ஸ், பேப்பர் படிக்கலாம் .
ரமேஷ் வேலைக்குப் போய் சேர்ந்ததும் அவன் செல் சத்தமிட்டது. எதிர் முனையில் திவ்யா.
" ரமேஷ், இனிமேல் என்னுடன் பேச வேண்டாம். இன்று காலையில் வேலைக்குப் போகும் போது கைவலிக்க டாட்டா காட்டி, ப்ளையிங் கிஸ் குடுத்தேன். நீ கண்டு கொள்ளாமல் போய் விட்டாய்... "
ரமேஷ் : தாயே மன்னித்து விடு. நான் கவனிக்கவில்லை.
திவ்யா போனை கோபத்துடன் வைத்து விட்டாள்.
எங்களுக்குள் இந்தப் பழக்கம் கல்யாணமாகிய புதிதில் தொடங்கியது. நான் வேலைக்குப் போகும் போது திவ்யா எங்கள் வீட்டின் அடுக்குமாடிக் குடி
யிருப்பின் 5வது தளத்தில் நின்று கைகாட்டி, ப்ளையிங் கிஸ் கொடுப்பாள். நானும் பதிலுக்கு கைகாட்டுவேன். அக்கம் பக்கம் யாருமில்லா விட்டால் ப்ளையிங் கிஸ் குடுப்பேன்.

ஜூன், 2009
***************
ரமேஷ் வேலையால் வந்தான். நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாதபடியால் வீடெங்கும் தூசியும், குப்பையுமாக காட்சி தந்தது. திவ்யாவுக்கு குப்பை, தூசி என்றாலே அலர்ஜி.
" திவ்யா, இதோ ஒரு மணி நேரத்தில் சுத்தம் பண்ணிவேன்டா. நீ ரெஸ்ட் எடும்மா. பசிக்குதா? இதோ இப்பவே போய் சாப்பாடு வாங்கி வருகிறேன். இன்று நிறைய வேலை. அசதியா இருக்கு. நாளைக்கு உனக்கு பிடித்த மீன் பொரியல் செய்து தரேன்டா ."

ஜூலை 16, 2008
****************
இன்று திவ்யாக்கு பிறந்தநாள்.
ரமேஷ் : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திவ்வி.
திவ்யா : மிக்க நன்றி.
ரமேஷ் : இந்த வீக்கென்ட் நயாகரா அருவி பார்க்கப் போலாமா?
திவ்யா : போலாமா இல்லை. கட்டாயம் போகிறோம்.
திவ்யாவுக்கு நயாகரா போவதென்றால் கொள்ளை விருப்பம். சமர் வந்தால் அடிக்கடி போவோம். அதிகாலையிலே போய் கைகோர்த்தபடி நடப்போம். பார்க்கில் அமர்ந்து, கொண்டு போன உணவுகளை உண்டு, கதைகள் பேசி, வீடு வந்து சேர இரவாகி விடும். ஒவ்வொரு முறையும் நயாகரா அருவி தெரியுமாறு நின்று புகைப்படம் எடுத்து, திகதி வாரியாக ஆல்பத்தில் அழகாக போட்டு வைப்பாள்.

திவ்யா : ரமேஷ், நிலக்கடலை வாங்க மறந்து விட்டேன். அன் சால்டட் வாங்கு சரியா?
ரமேஷ் : ம்ம் .. வாங்கி வருகிறேன்.
அருவியின் அருகில் இருக்கும் பார்க்கில் ஓடித் திரியும் அணில்களுக்கு நிலக்கடலை கொடுப்பது திவ்யாவுக்கு மிகவும் பிடிக்கும். இவளின் கைகளில் இருக்கும் கடலையை அணில்கள் கிட்ட வந்து வாங்கிச் செல்லும்.

அருவி வழக்கம் போல இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு போய் சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு மீண்டும் தலைவலி. அவள் கீழே இருந்து விட்டாள். ரமேஷ் தடுமாறிப்போனான். அடுத்த நாள் மருத்துவரிடம் கட்டாயம் போக வேண்டும் என்று நினைத்தான் ரமேஷ். ஆனால், திவ்யா சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விட்டாள்.

அடுத்த நாள் ரமேஷ் எவ்வளவோ கெஞ்சியும் திவ்யா மருத்துவரிடம் போக மறுத்து விட்டாள்.

ஜூலை 25, 2008
***************

ரமேஷின் செல் ஒலித்தது. எதிர்முனையில் திவ்யாவின் டேகேரிலிருந்து அழைப்பு. திவ்யா ஆஸ்பத்திரியில் என்று தகவல் சொன்னார்கள். ரமேஷ் ஓடினான். மீண்டும் தலைவலியால் சோர்ந்து போயிருந்தாள் திவ்யா. நிறைய டெஸ்டுகள் நடந்தன. ரிசல்ட் வரத் தான் முடிவு தெரியும் என்றார்கள். ரமேஷூக்கு அவஸ்தையாக இருந்தது. மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் உள் மனது கதறியது.

" உங்கள் மனைவிக்கு புற்றுநோய். உடல் முழுக்க பரவியுள்ளது .... " இது மட்டுமே ரமேஷின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. வேறு எதுவுமே மனதில் பதியவில்லை. ரமேஷ் தனிமையில் அழுதான்.

ஆகஸ்ட் 10, 2008
*************

திவ்யாவுக்கு கீமோதெரபி என்று ஏதேதோ சொன்னார்கள். மனதளவில் சோர்ந்து போயிருந்தாலும் உற்சாகமாக பேசிக் கொண்டேயிருந்தாள்.
" ரமேஷ், என்னைப் பார்க்க ஏலியன் போல இல்லை? ", என்பாள் முடி எல்லாம் கொட்டிய தன் மொட்டைத் தலையை தடவியபடி.
" என் அழகிய ஏலியனே ", என்று சொல்லி திவ்யாவை அணைத்துக் கொள்வான் ரமேஷ்.

ரமேஷ் எவ்வளவோ சொல்லியும் திவ்யா வேலையை விட மறுத்தாள். நான் சுகமாகி வந்ததும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். வீடு முழுவதும் குழந்தைகள். உன் மடியில் ஒன்று, தோளில் ஒன்று.... என்று சொல்லி சிரிக்கும் திவ்யாவை அன்புடன் பார்ப்பான் ரமேஷ்.

ஜனவரி 29, 2009
***************



மீண்டும் திவ்யாவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள்.

" உங்கள் மனைவி 6 மாதங்களே உயிரோடு இருப்பார்... " என்று மருத்துவர் சொன்னபோது ரமேஷ் கதறி அழுது விட்டான்.

இவனின் வாடிய முகத்தைக் கண்டதும் திவ்யா ஓரளவு ஊகித்து விட்டாள்.

" ரமேஷ், நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேனாம் ", என்று கேட்டவளை கட்டிப் பிடித்துக் கதறி அழுதான் ரமேஷ்.

வின்டர் குளிரிலும் நயாகரா அருவி பார்க்க வேண்டும் என்று சொன்ன திவ்யாவை கூட்டிச் சென்றான். அணில்களைக் காணவில்லை. திவ்யா இயல்பாக இருந்தாலும் ரமேஷால் அவ்வாறு இருக்க முடியவில்லை.

பூமிப் பந்து வேகமாக சுற்றுவது போல இருந்தது ரமேஷூக்கு. புற்றுநோய் ஆஸ்பத்திரியிலேயே இறுதி நாட்களை கழித்தாள் திவ்யா. கடைசி ஒரு வாரம் இருக்கும்போது வீட்டிற்கு கூட்டி வந்து, ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டான்.

மே 30, 2009
************


திவ்யா இறந்து போய் இரண்டு வாரங்களாகி விட்டது. எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. எதுவுமே ஞாபகம் இருக்கவில்லை. திவ்யாவின் தோழிகள், ரமேஷின் அலுவலக நண்பர்கள் வந்து போனார்கள். ரமேஷ் அழவில்லை. எங்கோ சூனியத்தை வெறித்தபடி இருந்தான்.

2 வாரங்களாக வேலைக்குப் போகாமல் இருந்த ரமேஷைப் பார்க்க அவன் நண்பன் வந்தான்.

" வா எங்கேயாவது சென்று வரலாம் ", என்று கூப்பிட்டான்.
" இரு திவ்யாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் " , என்று சொன்னவனை விசித்திரமாகப் பார்த்தான் நண்பன்.

காலாற இருவரும் நடந்தார்கள். தூரப் போய் நின்றவன் பால்கனியை திரும்பி பார்த்தான். அது வெறிச் சோடிப் போய்க் கிடந்தது. நண்பன் ஆதரவாக தோளில் தட்டினான்.

ஜூலை 16, 2009
*************

இன்று திவ்யாவுக்கு பிறந்தநாள். நயாகரா அருவி பார்க்கப் போனான் ரமேஷ். மழை வரும் போல இருந்தது. வழக்கமாக அமரும் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அணில்கள் ஓடி வந்தன.

மெதுவாக தொடங்கிய மழை சடசடவென விழுந்தது. ஆங்காங்கு நின்றவர்கள் ஓடிப் போய் ஒதுங்கி கொண்டார்கள். ரமேஷ் அசையவேயில்லை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து ஓடியது. குலுங்கி அழுதவனை அணைத்துக் கொள்ள அங்கு மழை மட்டுமே இருந்தது.

Tuesday, June 8, 2010

எனக்குப் பிடித்த பத்து படங்கள்

வலைப்பூ நாகரீகம்
***************
படங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம். எனக்குப் பிடித்த படம் என் கணவருக்கோ அல்லது தோழிக்கோ பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுபவர்களுக்க்கும் அந்த படம் ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கலாம். அதற்காக விமர்சனம் எழுதிய நபரை தாக்கி பேச வேண்டாமே. சமீபத்தில் அப்படி ஒரு பதிவு பார்த்தேன். அந்த நபர் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் விமர்சனம் எழுதிய நபரை தாக்கி எழுதியிருந்தார். இதனால் யாருக்கு என்ன லாபம். சபை நாகரீகம் போன்று வலைப்பூ நாகரீகத்தையும் கடைப்பிடிக்கலாமே.
இதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்திற்காக எழுதவில்லை. மற்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிப்பதில் நமக்கு என்ன லாபம். சிந்தியுங்கள்!

எல்கே என்னை பிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். என்னைப் போய் படங்கள் பற்றி எழுதச் சொன்னால் நான் என்ன செய்வேன். ஆகவே மக்களே நான் பல வருடங்களின் முன்பு பார்த்த, கேட்ட படங்கள்(!) பற்றி எழுதப் போகிறேன். ஏதும் தவறு இருந்தால் பொறுத்தருளுங்கோ.



அபியும் நானும்
************
எனக்கு பிரகாஷ் ராஜ் மிக மிக பிடிக்கும். அபியும் நானும் - இல் பிரகாஷ் ராஜின் நடிப்பு அசத்தல்.
அப்பாவாக வெளுத்து வாங்கியிருப்பார். ஏனோ த்ரிஷாவின் நடிப்பு எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஆனால் பிரகாஷ் ராஜ் படம் என்பதால் யுடியூப்பில் பார்த்தேன்.
அப்பாவிற்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகாக சொல்லும் படம். பார்த்ததும் அப்பாவின் நினைவு வந்தது உண்மை. இதெல்லாம் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால் தான் புரியுமோ என்று யோசித்தேன். இது வரை சொல்லப்படாத கோணத்தில் அழகாக கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
அப்படத்தில் ஒரு காட்சி.

சார், உங்களுக்கு ஹிந்தி புரியுமா?
ம்ம்.. மற்றவங்க பேசும் போது ஹிந்தி பேசுறாங்கன்னு புரியும் - இது பிரகாஷ் ராஜின் பதில்.


The God must be crazy
***********************

இந்தப் படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம். பழங்குடி இனத்தவர், ஒரு இளைஞன், ரௌடி கும்பல் ஆகியோர் கதையில் வருகின்றனர். பழங்குடி இனத்தவரின் கைகளில் ஒரு பாட்டில் ( பிளேனில் இருந்து யாரோ தூக்கி வீசிய சோடா பாட்டில் ) கிடைக்கிறது. நாகரீகத்தின் சுவடே இல்லாமல் இருக்கும் அவர்கள் கடவுள் தான் அதைக் கொடுத்தார் என்று மகிழ்கிறார்கள். அந்த பாட்டில் வந்ததில் இருந்து அவர்களுக்கு இடையில் ஒரே சண்டை. கடைசியில் அந்த இளைஞன், ரௌடி கும்பல் , பழங்குடியினர் எல்லோரையும் அழகாக கதையில் புகுத்தி, கதையை அருமையாக முடித்துள்ளார்கள். இறுதியில் அந்த பாட்டிலுக்கு என்ன நடந்தது, பழங்குடியினர் எப்படி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் என்று அழகான முடிவு. இப்படி கூட படம் எடுக்கலாமா என்று வியந்து போனேன். குறைந்த பட்ஜெட், தெளிவான கதை, நல்ல நகைச்சுவை என்று மிகவும் நல்ல படம்.



நான் கமல் ரசிகை. எனக்கும் மேகத்திற்கும் இடையில் பிரிவு வந்த போதும் எனக்கு கமலில் கோபமோ, வெறுப்போ வந்ததில்லை ( சரி! நோ டென்ஷன். மேலே படிங்க ) . கமலின் 10 படங்கள் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சலங்கை ஒலி
************

கமல் படத்தில் என் பேவரைட் இந்தப் படம். எப்போதும் மிகவும் பிடிக்கும். பரதநாட்டியம் ஆடி அசத்தி இருப்பார். அழகான கதை, அழகான கமல், சோகமான முடிவு. அடிக்கடி யுடியூப்பில் பார்த்து ரசிக்கும் பாடல் சலங்கை ஒலி பாடல்.

சதிலீலாவதி
**********
கமல் படம். ஆனால் கோவை சரளா தான் மிகவும் அசத்தி இருப்பார். கமலுக்காக பார்த்தாலும் கோவை சரளா தான் கமலை டாமினேட் பண்ணுவது போல இருந்தது. அழகிய கோவை தமிழில் பேசி, சிரிக்க வைப்பார். நான் கோவை சரளாவின் விசிறி ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். ஆனால் இப்பெல்லாம் அவரை படத்தில் காண்பதே அபூர்வமாகி விட்டது.

அவ்வை சண்முகி
**************
கமல், மணிவண்ணன் கூட்டணி நல்லா இருக்கும். கமல் மாமியாக வரும் காட்சிகள் சூப்பர். மணிவண்ணன் ஒரு பக்கம் ஜொள்ளு விட, ஜெமினி ஒரு பக்கம் ஜொள்ளு விட இடையில் கமல் மீனாவிடம் ஜொள்ளு விடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. கமல் வீசியெறியும் பூ மணிவண்ணன் மீது விழ, அதை மணிவண்ணன் கமலிடம் காட்ட, கமலின் ரியாக்ஷன் செம காமடி.

தெனாலி
********
கமல் இலங்கைத் தமிழில் பேசும் அழகே அழகுதான். ஜெயராமும் கமலுக்கு இணையாக நல்ல காமடி. அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கமல் ஜெயராமை டென்ஷன் ஆக்கும் காட்சிகள் செம சிரிப்பு. கமல் அவரின் அம்மாவைப் பற்றி சொல்லும் காட்சியில் எல்லோரையும் அழ வைக்கிறார்.

கன்னத்தில் முத்தமிட்டால்
*********************
மணிரத்னம் படம். எனக்கு மிகவும் பிடித்த படம். பல காட்சிகள் நான் இலங்கையில் இருந்த போது நிகழ்ந்ததை ஞாபகம் ஊட்டியது. குறிப்பாக அகதிகள் கூட்டமாக செல்லும் போது ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்ட காட்சி, படகில் ஏறிச் செல்லும் காட்சி இப்படி பல. சில காட்சிகளில் நான் அழுதேன். மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ் எல்லோரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். நந்திதா தாஸின் நடிப்பு என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு. மிகவும் அழகிய எனக்கு மிகவும் பிடித்த நடிகை.

அபூர்வ சகோதரர்கள்
*****************
குட்டைக் கமலின் நடிப்பு தூள். நல்ல பாடல்கள், திரைக்கதை என்று எல்லாமே அருமை. வழக்கமான பழிவாங்கும் கதை தான். ஆனால் கமல் அதை வித்தியாசமாக, அழகாக செய்து பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறார். அதில் வரும் " உன்னை நினைச்சேன்... " எஸ். பி. பி பாடல் மிகவும் பிடிக்கும்.

Up
**
இது டிஸ்னி படம். ஒரு தாத்தா, பொடியன் இருவரும் தான் படத்தில் ஹீரோக்கள். அழகான கிராபிக்ஸ், கதை என்று ஒரே அசத்தலாக இருக்கும் படம். டிஷ்னி படம் என்றால் கம்யூட்டர் சும்மா பூந்து விளையாடும். அந்த தாத்தாவின் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷன்ஸ் அவ்வளவு அழகாக காட்டுவார்கள். தாத்தாவின் பழைய வீட்டில் எப்படி உலகம் சுற்றி பார்க்க போகிறார் என்று கதையை அழகா சொல்லியிருப்பார்கள்.

வைஜெயந்தி ஐ.பி.எஸ்.
*******************
விஜயசாந்தி பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். சின்ன வயதில் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று விருப்பம். அது நிறைவேறாமல் போய் விட்டது. விஜயசாந்தி படம் பார்த்த போது ஒரு அற்ப சந்தோஷம். ஏதோ நானே போலீஸ் ஆனது போல ஒரு மிதப்பு. அவர் எதிரிகளை அடித்து, துவைக்கும் காட்சி, காயம் பட்டு மீண்டும் பணிக்கு செல்லும் காட்சி என்று பல காட்சிகள் நினைவில் இருக்கு. இந்தப் படம் பார்த்து 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது, ஆனால் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கு.

Monday, June 7, 2010

மீண்டும் மீண்டும் சாம்பு!

போன முறை பந்து எடுத்து குடுக்க சொல்லி கெஞ்சினேன். யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. அதனால் நான் யாரோடும் பேசப்போவதில்லை. நான் சொல்லும் கதையை மட்டும் கேளுங்கோ. குறுக்கே குறுக்கே பேசுவதோ, கேள்வி கேட்பதோ வேண்டாம்.

நேற்று கிருஷ்ணா வந்தான். அவனுக்கு மனசே சரியில்லை. ஏன் என்று யார் கேட்பது ? இமா பாட்டியா? ஸ்ஸ்..நோ கொஸ்டின்ஸ். அவன் அம்மா வேலைக்குப் போகப் போகிறார்களாம். இவனை டேக்கேருக்கு அனுப்ப போகிறார்களாம். இவன் போய் டேக்கேரைப் பார்த்து, அங்கேயே ஒரு மணி நேரம் இருந்து விட்டு வந்தானாம்.

அந்த ஒரு மணிநேரத்திலேயே ஜஸ்டீன் என்ற பொடியன் இவன் காதைக் கடித்து விட்டானாம். சிவந்து போயிருந்த காதை எனக்கும் காட்டினான். முன்பு ஒரு முறை விளையாட்டு பொருளால் என் தலையை பதம் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டான். இனிமேல் இருவரும் அடிக்கடி பார்க்க முடியாது என்றும் சொன்னான். இப்ப எனக்கு மனசே சரியில்லை. என்ன வாழ்க்கை இது ?

ஆரம்பத்தில் கிருஷ்ணாவை பார்க்காமல் இருக்க போரடித்தது. ஆனால் இப்போது பழகி விட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கிருஷ்ணாவைப் பார்த்தேன். டேக்கேரில் மற்ற வசதிகள் இருந்தாலும் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவதாக சொன்னான். வீட்டிலிருக்கும் போது மதியம் நெய், பருப்பு சாதம் என்று விதம் விதமாக உள்ளே தள்ளியவன் பாவம் இப்போ மிகவும் நொந்து போயிருந்தான். நான் ஆறுதல் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவனில்லை.

என் பொழுது ஆனந்தமாகவே போனது. காலையில் சீரியல், ஆப்பிள். மதியம் பருப்பு, நெய் சோறு, மீன், வாழைப்பழம். இரவு இட்லி, தோசை, முட்டை என்று மூன்று நேரமும் விருந்து தான். மதியம் சாப்பிடும் போது கிருஷ்ணாவை நினைத்துக் கொள்வேன். டேக்கேரில் என்னத்தை தின்பானோ என்று யோசனை ஓடும்.

நான்கு மாதங்களின் பின் நான் கிருஷ்ணா வீட்டிற்கு போனேன். ஆளே மாறியிருந்தான். ஏதோ மாம், டாட் என்று புதுசு புதுசாக நிறைய ஏதேதோ சொன்னான். எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை. என்னைக் கண்டதும் ஒரு நாளும் இல்லாத திருநாளாக கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தான். நான் கூச்சத்தினால் நெளிந்தேன். அவனுடைய டேக்கேரில் அப்படித்தான் செய்வார்களாம்.

கிருஷ்ணாவுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாள். அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போனார். கிருஷ்ணாவுக்கு என்ன பிடிக்கும், என்ன கிப்ஃட் வாங்குவது என்று எனக்குத் தான் தெரியும். வாங்கிய பரிசை அழகா பேப்பரில் சுற்றி பிறந்தநாளுக்கு போனோம்.

வீடு நிரம்ப ஆட்கள் . அவன் டேக்கேரிலிருந்தும் நண்பர்கள் ( தீபுக்குட்டி, அரண் , டொமார் ) வந்திருந்தார்கள். கிருஷ்ணா என்னைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஒரு ஹாய் மட்டுமே சொன்னான். அவன் நண்பன் ஜஸ்டீனை அறிமுகம் செய்து விட்டு ஓடிவிட்டான். இவன் தானே கிருஷ்ணாவின் காதைக் கடித்தவன். நான் ஒரு மூலையில் தனித்து விடப்பட்டேன். கிருஷ்ணா நிறைய ஆங்கிலம் பேசினான். நண்பர்கள் அவனை செல்லமாக கிருஷ் என்றார்கள்.

எனக்கு கேக், ஸ்நாக்ஸ் எதுவுமே இனிக்கவில்லை. கிருஷ்ணா என் நண்பன் தான் எப்போதும். அவன் மறந்தாலும் நான் அவனை மறக்கமாட்டேன்.
எனக்கு மனசே சரியில்லை. அழுகை வருது. நான் தனிமையில் கொஞ்ச நேரம் இருக்க போறேன். உங்கள் பிழைகளையும் மன்னித்து விட்டேன். எல்லோருக்கும் என் அன்பு. போய் வாருங்கள்.