Monday, January 21, 2013

மீண்டும் சாம்பு


என்னை நினைவிருக்கா? நான் தான் சாம்பு என்கிற சாம்பசிவம். நான் பள்ளி போகத் தொடங்கியபிறகு பிஸியாகிவிட்டேன். இப்ப உங்கள் எல்லோருக்கும் பள்ளியில் நடந்த கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது ஒன்றும் பெரிய சாதனைக் கதை அல்ல என் வேதனைக் கதை. யாரிடமாவது என் பாரத்தை இறக்கி வைத்தால் நல்லது போல இருக்கு.
சரி இப்ப கதைக்கு வருவோம். என் ஆசிரியையின் பெயர் திருமதி. லீசா. நல்லவர் தான். குறையொன்றும் சொல்வதற்கில்லை. பள்ளிக்கு போகத் தொடங்கி ஒரு 3 நாட்கள் இருக்கும். எனக்கு ஒரு நாள் வயிறு  கொஞ்சம் சரியில்லை. வீட்டிலேயே அம்மாவிடம் சொன்னேன்.  நான் சொல்லி அவர் எப்ப கேட்டார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ கிளம்பு, என்று என்னை பள்ளியில் இறக்கிவிட்டார்.

முதல் நாள் சாப்பிட்ட நண்டுக் கறி தன் வேலையை காட்ட ஆரம்பித்து இருந்தது. பள்ளி போய் சிறிது நேரத்தில் ஏதோ ஒரு மணம் என் பக்கம் இருந்து வருவதாக கூறி மாணவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். எனக்கும் ஏதோ ஒரு உணர்வு ஆனால் என்னவென்று விளங்கவேயில்லை. லீசா வந்தார். என்ன சாம், ஆய் போய்ட்டியா?, என்றார். நான் பாத்ரூம் போகாமல் அப்படியே நின்ற நிலையில் என் வேலையை முடித்து இருந்ததை அப்ப தான் உணர்ந்தேன். லீசா பள்ளி நேர்ஸிடம் என்னை அனுப்பினார்.

சாம், உன்னிடம் மாற்று துணிகள் ஏதாவது உன் லாக்கரில் இருக்கா?, என்று கேட்டார் நேர்ஸ். நான் என்னத்தைக் கண்டேன். அவமானம் ஒரு பக்கம். போட்டிருந்த துணிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு வேறு புது துணி அணிய வேண்டும் என்ற எண்ணம் தவிர எதுவும் வரவேயில்லை. என் லாக்கரில் மாற்று துணிகள் எதுவும் இல்லை என்று லீசா நேர்ஸூக்கு தகவல் அனுப்பினார். நேர்ஸ் தன்னிடம் இருந்த மூட்டையினை பிரித்து ஏதோ ஒரு செட் ஆடைகள் எடுத்தது கலங்கிய கண்கள் ஊடாக மங்கலாகத் தெரிந்தது. அதன் பிறகு அவர் என் ஆடைகளை களைந்து சுத்தம் செய்தார். அவருக்கு நல்ல பொறுமை தான். என் அம்மாவாக இருந்தால் முதுகில் 2 போட்டிருப்பார்கள். என்னை சுத்தம் செய்து, எனக்கு வேறு ஆடைகள் அணியச் செய்தார். என் கைகளை சுத்தமாக கழுவச் செய்தார்.


அதன் பிறகு என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தார் நேர்ஸ்.
"ஹலோ சாம்புவின் அம்மாங்களா? எப்படி இருக்கிறீங்க?, என்று நலம் விசாரிப்புகளுக்கு பிறகு தொடர்ந்தார். உங்க மகன் இன்று பள்ளியில் ஆய் போய்ட்டார். அவருக்கு மாற்று துணிகள் கொடுத்து, அவரை சுத்தம் செய்து... ஒன்று சொல்ல மறந்துட்டேன் என்னிடம் ஆண் குழந்தைகள் அணிவதற்கு ஏற்ற உள்ளாடைகள் கை வசம் இல்லை. எனவே பெண்கள் அணியும்....."
என்னது பெண்கள் அணியும் உள்ளாடையா? என்ன கொடுமை இது? மெதுவாக என் காற்சட்டையினை கிளப்பி பார்த்தேன். என் தங்கையின் உள்ளாடை போல பூக்கள், சின்டரெல்லா படம் அச்சிடப்பட்டிருந்தது. என்ன அவமானம்!
ஜிம்மில் கீழே விழுந்து மூக்கு அடிபட்டு இரத்தம் ஒழுக வந்து நின்ற ஒரு பொடியன் அவன் வேதனையை மறந்து கெக்கே பிக்கே என்று சிரித்தான். இவனுக்கு இன்னும் வேணும், என்று மனதினுள் சபித்துக் கொண்டேன்.

என் அம்மா என்ன சொன்னார்கள் என்று நான் கேட்கவில்லை. இன்று  வீடு போனதும்... வீடு போகவே நடுக்கமாக இருந்தது. என் அம்மாவுக்கு விளக்கம் சொல்ல என் நாக்குத் தள்ளி விடும். வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால், பாருங்கள் அன்று பள்ளி முடிந்து என்னை அழைக்க வந்தவர் என் அப்பா தான். அப்பா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு போனதும் அவரே என்னை குளிக்க வைத்து, வேறு ஆடைகள் மாற்றி, என் பழைய துணிகளை அலசி, என் உள்ளாடையை சிறிது நேரம் உற்று நோக்கினார், ஆனால் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.
மாலை 5 மணி அளவில் அப்பா ஒரு பெட்டியினை எடுத்து, அதில் அவரின் துணிகளை அடுக்க ஆரம்பித்தார். அம்மா இன்னும் வேலையால் வரவில்லை.
" அப்பா, இனிமேல் இப்படி செய்யமாட்டேன். நீங்கள் அதுக்காக வீட்டை விட்டு போக வேண்டாம்", என்றேன்.
" இல்லடா செல்லம். அப்பா இன்று வேலை விடயமாக வெளியூர் போறேன். பள்ளியில் நடந்தது ஒரு விபத்து. அதைப் பற்றி நாங்கள் மறந்துவிடுவோம் சரியா?", என்றார் என்னை அணைத்தபடி.
நல்ல அப்பா தான். ஆனால், அம்மாவை நினைத்தால் குலை நடுக்கமாக இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன என்கிறீர்களா? நானும் அப்பாவுடன் வெளிநாட்டுக்கு  போய்விட்டால் அம்மாவிடம் இருந்து தப்பிவிடலாம். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது அம்மா அதைப் பற்றி மறந்து போயிருப்பார்கள்.
என் எண்ணத்தை செயலாக்க விரைந்தேன்.
"அப்பா,  நீங்கள் இந்தப் பையை விட கொஞ்சம் பெரிய பையாக எடுத்தால் நல்லது என்பது என் கருத்துப்பா", என்றேன்.
அப்பாவின் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. நான் கடுப்புடன் நின்றேன்.
" பெரிய பை எதுக்கு சாம்பு?", என்றார் அப்பா.
" என் துணிகளையும் எடுத்து வைக்கிறேன். நானும் உங்களோடு வந்தே தீரூவேன்", என்றேன்.
அம்மா வரும் நேரம். அதற்குள் கிளம்பினால் நல்லது. ஆனால், அப்பா கணிணியில் பிஸியாகிவிட்டார். அடுத்தவர் வேதனை தெரிந்தால் தானே இவருக்கு என்று நினைத்தபடி, என் வசம் இருந்த சிறிய பையினுள் என் துணிகளை அடுக்கத் தொடங்கினேன். என் பையினை அப்பாவின் பையின் பக்கத்தில் வைத்துவிட்டு, சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். அப்பாவின் மீது ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணும், அம்மா வருகிறார்களா என்று பதைபதைத்தபடி காத்திருந்தேன்.
காத்திருத்தல் சுகமானது என்று யாரோ ஒரு கவிஞர் பாடியிருக்கிறாராமே. என் விடயத்தில் மிகவும் கொடுமையாக இருந்தது.
" சாம்பு, எழுந்திரு. ஸ்கூல் போக வேணும்", என்ற குரலுக்கு எழும்பினேன்.
என் பை அங்கேயே இருந்தது. அப்பாவின் பையை காணவில்லை. அப்பா மீது கோபம் வந்தது.
என்ன அதிசயம்?! அம்மா என்னை எதுவும் கேட்கவில்லை. ஆனால், எனக்கு பள்ளிபோக தயக்கமாக இருந்தது.
அம்மாவிடம் மெதுவாக சொன்னேன்.
" சாம்பு, தவறு செய்வது மனித இயல்பு. அதுக்காக அதையே நினைத்து வருந்தி, அங்கேயே தேங்கி நின்றால்...", என்று அவரின் பிரசங்கத்தை ஆரம்பித்து இருந்தார்.
சரி. நான் பள்ளிக்கு போக நேரமாகிவிட்டது. நீங்களும் எல்லோரும் போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.


( http://vanathys.blogspot.com/2010/06/blog-post_07.html
http://vanathys.blogspot.com/2010/07/blog-post_13.html )


Wednesday, December 26, 2012

மார்கஸ்


மார்கஸ் அந்த சிறைச் சாலைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது. மார்கஸ் ஒரு வங்கி கொள்ளையன். இது வரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் தன் கை வைரிசையை காட்டிவிட்டான். கொள்ளையடிக்க போகும் போது குறுக்கே யார் வந்தாலும் ஒரே போடாக போட்டுவிடுவான். இவன் செய்த கொலைகள் கிட்டத்தட்ட 5 இருக்கும். சிம்ம சொப்பனமாக இருந்தவனை அரும்பாடுபட்டுப் பிடித்தார்கள். ஒரு உள்ளூர் சிறையில் அடைத்தபோது இவன் தப்பி ஓடிவிட்டான். இவனுக்கு ஏற்ற சிறை இதுவாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்து, மேல் அதிகாரிகள் அனுமதியுடன் மார்கஸ் இந்த சிறையில் அடைக்கப்பட்டான். நான்கு பக்கமும் தண்ணீர் சூழப்பட்ட இடத்தில் இருந்தது இந்த சிறைச்சாலை. சிறையினை சுற்றி மூன்று பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வனாந்திரம். யாரும் தப்பி போக நினைத்து காட்டுக்குள் போனால் இரண்டு நாட்களில் மரணம் நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு கொடிய மிருகங்கள் நிறைந்திருந்த காட்டுப்பகுதி அது. தப்பித்துப் போக நினைப்பவர்களுக்கு ஒரே வழி கடல் மட்டுமே. கடல் வழியாக நீந்தி மட்டுமே கரை சேர  முடியும். கிட்டத்தட்ட 100 மைல்கள் நீந்தினால் கரை சேரலாம் உயிரோடு இருந்தால். இந்த தகவல்கள் எல்லாம் ஜெயிலர் பீட்டர் சொன்ன தகவல்கள். அவர்  சொன்ன தகவல்கள் உண்மை தான் என்று சக கைதிகள் உறுதி செய்தார்கள். அந்த சிறைச் சாலையிலிருந்து உயிரோடு வெளியே போனவர்கள் யாருமே இல்லையாம். உள்ளேயே இருந்து மெதுவாக மரணத்தை தழுவிக் கொள்ள மார்க்கஸ்ஸூக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையின் கம்பிகள் சூழ்ந்த வளாகத்தில் நின்று அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அதை தன் வசம் இருந்த பேப்பரில் சங்கேத வார்த்தைகளினால் குறித்துக் கொண்டான். ஒரு கிழமைக்கு ஒரு தடவை வரும் கப்பல் தான் அவனின் ஒரே ஒரு நம்பிக்கை. அந்த கப்பலில் எப்படியாவது ஏறிக் கொண்டால் ஏறக்குறைய தப்பியது போலத் தான் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் வேலியோரம் நின்று கடலை வெறித்துக் கொண்டிருந்தபோது பீட்டர் அருகில் வந்தார். என்ன மார்கஸ்,  யோசனை பலமா இருக்கே?", என்றார்.
பதில் சொல்லாது வெறித்தான்.
" இதோ பார் மார்கஸ்", என்று ஒரு செடியினைக் காட்டினார்.
அந்தச் செடியில் குழல் போல நீண்ட பூக்கள், அழகிய நீல நிறத்தில் பூத்துக் குலுங்கின.
" இந்த வகை பூக்கள் வேறு எங்கும் நீ பார்க்க முடியாது. ", என்றார்.
இப்ப அதுக்கென்ன என்பது போல பார்வையினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
" மார்கஸ், நீ இங்கிருந்து தப்பி போகலாம் என்று கனவிலும் நினைக்காதே. இங்கிருந்து போக வேண்டும் எனில் ஒன்று நீ இறக்க வேண்டும். அல்லது அரசாங்கம் இரக்கப்பட்டு உன்னை விடுதலை செய்தால் தான் உண்டு. எனவே இந்த வேலியோரம் நின்று சமுத்திரம், காடு இவற்றை வெறித்துப் பார்ப்பதை நிப்பாட்டு", என்று மிரட்டும் குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.


பீட்டர் எல்லோரிடமும் அந்த நீண்ட குழாய் போன்ற பூக்களை மிகவும் சிலாகித்துப் பேசுவார். யாருமற்ற தீவில் அந்தப் பூக்கள் எல்லோர் கண்களுக்கும் விருந்து படைத்தன என்பது உண்மைதான். மார்கஸ் கூட தன்னை மறந்து பூக்களை ரசித்ததுண்டு. சிறையின் கம்பி வேலி மீது படர விடாமல் அடிக்கடி கத்தரித்து விடுவார்கள் அங்கிருப்பவர்கள். எங்கே அந்தச் செடி வேலி மீது படர்ந்து, முற்கம்பிகள் மீது அரணாக மூடி, சிறையில் இருப்பவர்கள் அதன் வழியாக தப்பித்து ஓடி விடாமல் இருக்க இந்த ஏற்பாடு.

 பீட்டர் அந்த இடத்தினை விட்டுச் சென்றதும் எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று மார்கஸூக்கு வெறி உண்டானது. பீட்டரின் திமிர் தனத்தை அடக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மார்கஸ் அங்கு வந்து 4 மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு கிழமையும் திங்கள் வரும் கப்பல், அதில் வரும் சாமன்களை ஏற்ற சிறையில் இருந்து செல்லும் ஊர்திகள், அந்த ஊர்திகளை கடுமையாக சோதனை செய்த பின்னர் அனுப்பும் அதிகாரிகள் என்று பலவற்றையும் அமைதியாக கிரகித்துக் கொண்டான். அந்த ஊர்திகள் வழியாக தப்பிச் செல்வது எளிதான காரியம் அல்ல. வேறு ஏதாவது யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சிறையில் பல வருடங்களாக இருக்கும் கைதி மைக்கேல் தான் ஒரே ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட 60 வயதாவது இருக்கும் மைக்கேலுக்கு. அவர் ஏன் சிறை வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் அப்பாவி போல தெரிந்தார். சிறை அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். மார்கஸ் மைக்கேலுடன் வலியப் போய் பேசி நட்பு பாராட்டினான். மைக்கேல் ஒவ்வொரு நாளும் சிறையில் சேரும் குப்பைகளை சேகரித்து, ஒரு பெரிய கை வண்டியில் போட்டு, சிறைக்கு வெளியே போய் வைத்து வருவார். வாசலில் நிற்கும் காவலாளி ஈட்டி போன்ற கூரான முனை கொண்ட ஒரு கம்பியினால் கை வண்டிக்குள் இருக்கும் குப்பைகளை குத்திக் கிளறி ஒரு வழி பண்ணிய பிறகே வெளியே போக அனுமதிப்பார்.


மைக்கேல் ஒரு நாள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தான் மார்கஸ். அவர் அசந்த நேரம் கை வண்டிக்குள் ஏறி ஒளிந்து கொண்டான். கை வண்டி வாசலைக் கடந்தபோது  காவலாளி ஈட்டியினை எடுத்துக் கொண்டு வந்து குத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய குத்துகள் பின்னர் வேகமெடுக்க ஆரம்பித்தன. லாவகமாக நழுவப்பார்த்தான் மார்கஸ். ஆனால், தோள்பட்டையில் சரமாரியாக விழுந்த குத்துக்களுக்கு வீரிட்டுக் கத்த நினைத்தவன் பற்களை கடித்துக் கொண்டே தாங்கிக் கொண்டான். ஒரு வழியாக சோதனை முடிந்ததும்  வெளியே வண்டியை அனுமதித்தான் காவலாளி.

கூரான ஆயுதத்தில் இரத்த்க கறையினை காவலாளி கவனிக்கவில்லையோ அல்லது அவனின் கவலையீனமோ என்று விளங்கவில்லை மார்கஸூக்கு. அந்த சிறைச்சாலையில் இருந்து யாரும் தப்பி போக மாட்டார்கள் என்று நம்பிக்கையாக கூட இருக்கலாம். 40 வருடங்களின் முன்னர் யாரோ ஒரு நபர் தப்பித்து செல்ல நினைத்து, கடலில் குதித்து உயிரை விட்டதாக ஜெயிலர் சொன்னது ஞாபகம் இருந்தது. இவனும் அப்படியே செத்து தொலையட்டும் என்று நினைத்தானோ என்பதும் புலப்படவில்லை.

எது எப்படியோ வெளியே வந்தாயிற்று. இருட்டும் வரை அங்கேயே இருந்தாக வேண்டும். கப்பல் இங்கிருந்து நகர இன்னும் சிலமணிநேரங்கள் இருந்தன. ஈட்டி குத்திய இடத்தில் இருந்து இரத்தம் ஓடியது. குப்பையிலிருந்த பழைய துணியின் மூலம் கட்டுப்போட்டுக் கொண்டான். நினைத்தது போல கப்பலில் ஓடிச் சென்று ஏறமுடியவில்லை. ஜெயில் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் விரைந்து மறைந்தது.

மார்கஸ் சிறையில் இல்லை, தப்பிவிட்டான் என்று இரவு தான் பீட்டருக்கு விளங்கியது. இந்நேரம் எந்தக் கொடிய மிருகத்துக்கு இரையாகி இருப்பானோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே எச்சரிக்கை மணியின் பொத்தானை அழுத்தினான். சிறைச்சாலை முழுவதும் அலாரம் அடித்தது. சிவப்பு விளக்குகள் மின்னின. அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் நாலா புறங்களிலும் விரைந்தோடினார்கள். மார்கஸ் இருந்த அறை சோதனை போடப்பட்டது.
மேலிடத்துக்கு தகவல் அனுப்பபட்டது.  காலையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று மேலிடத்திலிருந்து தகவல் வந்தது. அதிகாலையில் காட்டுக்குள் ஆட்கள் அனுப்பபட்டார்கள். மார்கஸின் உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பீட்டரின் இலட்சியமாக இருந்தது. மார்கஸ் கடல் வழியாக தப்பிச் சென்றிருப்பான் என்ற கோணத்தில் ஒரு பக்கம் விசாரணை நடந்தது. பீட்டரின் தலைமையில் ஒரு குழு கடலின் மறுபக்கம் அனுப்பபட்டார்கள். அது பாறைகள் சூழப்பட்ட இடம். சிறு குழுக்களாக பிரிந்து தேடத் தொடங்கினார்கள். யாருக்கும் மார்கஸ் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கை வரவேயில்லை பீட்டர் உட்பட. தேடுதல் முடிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூடுமாறு உத்தரவிட்டார் பீட்டர். ஏதோ பேச முற்பட்டவர் சிறிது தூரத்தில் நீல நிற குவளைப்பூக்கள் பாறைகளின் மேல் தெரிவதைப் பார்த்ததும் அருகில் ஓடினார். இது எப்படி இங்கே? ஒரு கொத்தாக பூக்கள் இருந்தன. யாரோ இவருக்காகவே வைத்திருந்ததைப் போல இருந்தது. இதை இங்கே வைத்தவன் மார்கஸ் தான் என்பது பீட்டருக்கு உறுதியாக விளங்கியது. எனக்கே சவாலா, என்று கருவியபடி, மார்கஸ் இன்னும் சாகவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான். அவனை பிடிக்கும் வரை நான் ஓயப்போவதில்லை, என்று சபதம் பூண்டார். இதன் பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார் பீட்டர். அந்த 25 வருடங்களும் மார்கஸ் பற்றி நினைக்காத நாள் இல்லை. அவன் எப்படி தப்பித்துச் சென்றான், அவன் எங்கே இருக்கிறான் என்பதோ யாருக்கும் புரியாத புதிர். 




























Sunday, December 2, 2012

சிங்கு மாமா



"30 நாட்களில் ஹிந்தி கற்றுக்கொள்ள இந்த நம்பரை அணுகவும்", என்ற விளம்பரத்தினை வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் செழியன்.
"அப்பா, வாங்கப்பா போகலாம்", என்று மகள் பல முறை அழைத்தபோதும் பதில் சொல்லாது விளம்பரத்தினை வெறித்துக் கொண்டே நின்றான்.

ஒரு பேப்பரில் ஹிந்தி கற்றுத் தருபவரின் தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் முகவரி  போன்றவை இருந்தன. தன்னுடைய கைத் தொலைபேசியை எடுத்து தகவல்களைக் குறித்துக் கொண்டான்.
மகள் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்திருந்தாள். மகளை வாரி அணைத்துக் கொண்டான். மன்னிப்பு கேட்டபடி கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்தான்.
"அப்பா, அது என்னப்பா?", என்றாள்  ஐந்து வயது நிரம்பிய அனுஷா.
" அதுவா? அது ஹிந்தி கற்றுத் தராங்களாம்", என்றான்.
"அப்பா, ஹிந்தி என்றால் என்னப்பா?", என்றாள் மகள்.
"அது ஒரு மொழி செல்லம். ஸ்பானிஷ், ப்ரெஞ், உருது போல  ஹிந்தியும் ஒரு மொழிடா", என்றான்.
"உங்களுக்கு ஹிந்தி தெரியுமாப்பா?",  என்றாள் அனுஷா.
"ம்ம்ம்ம்... 40 வரை எண்ணத் தெரியும்", என்றான் பெருமையுடன்.
அப்பா எனக்கும் சொல்லிக் கொடுப்பீங்களா?", என்ற மகளை காரினுள் அவளுக்குரிய சீட்டில் வைத்து, பெல்ட் அணிந்து வீட்டினை நோக்கி காரினை செலுத்த தொடங்கினான்.
அப்பா, உங்களுக்கு நாற்பது வரை எண்ண யார் சொல்லித் தந்தார்கள்?", என்றாள் மகள்.
" சிங்கு மாமா தான் சொல்லிக் கொடுத்தார்கள்", என்றான்.
"ஏன் அவர் நாற்பதுக்கு பிறகு சொல்லித் தரவில்லை?", என்று மீண்டும் கேள்வி. மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவளிடம் பேசிவிட்டு திரும்பி பார்க்க அனுஷா அரைத் தூக்கத்தில் இருந்தாள்.
செழியனுக்கு ஹிந்தி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் நிழலாடியது. இலங்கையில் இந்திய இராணுவம் 1980 களின் இறுதிப் பகுதியில் வந்து இறங்கினார்கள். இவனின் வீடு இருந்தது நகரின் பிரதான தெரு. இராணுவத்தினரின் சோதனைச் சாவடி கடந்தே இவர்கள் தினமும் போக வேண்டும்.  இவனுக்கு அப்போது 12, 13 வயது தான் இருந்திருக்கும். இராணுவத்தினரை கடந்து பள்ளிக்கு செல்லுதல், விளையாட செல்லுதல் என்று இவனின் பொழுது இனிமையாக சென்றது. அரணில் காவலுக்கு நின்ற நெடிய ஒரு இராணுவ வீரன் இவன் போகும் போது கைகளை ஆட்டி, சிநேகமாக புன்னகைப்பார். முதலில் பயம் காரணமாக  ஒரே ஓட்டமாக ஓடி விடுவான். நாட்கள் செல்லச் செல்ல இவனும் பதிலுக்கு புன்னகைக்கத்தான்.

ஒரு நாள் அவர் இவனிடம் வலிய வந்து பேசினார். எப்பவும் தூரத்தில் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவான். இப்ப பக்கத்தில் பார்த்ததும் சிறிது அச்சம் உண்டானது.  அவர் இவனின் கைகளை பிடித்து குலுக்கினார்.
"உன்னைப் பார்த்தால் என் மகன் போலவே இருக்கிறாய்", என்றார்.
"அவனுக்கும் உன் வயது தான் இருக்கும்", என்றவர், " உன் பெயரென்ன?", என்றார் ஆங்கிலத்தில்.
"செழியன்", என்றான் தயங்கியபடி. அப்பா பார்த்தால் முகுகில் நாலு அப்பு அப்பி விடுவார் என்ற எண்ணம் வர ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். இப்படியே உருவான நட்பு கொஞ்சம் வலுப்பெற்றது.
ஒரு நாள் அவரிடம், " நீங்கள் என்ன மொழி பேசுவீங்கள்?", என்றான் ஆங்கிலத்தில்.
" நான் ஹிந்தி பேசுவேன். ஏன் உனக்கு பழக விருப்பமா?", என்றார்.


அப்பாவை நினைத்தால் குலை நடுங்கியது இருந்தாலும் அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். ஒவ்வொரு நாளும் 5 இலக்கங்கள் சொல்லித் தருவதாக ஏற்பாடு.
ஏக், தோ, தீன்.... என்று அவர் ஹிந்தியில் சொல்ல இவன் அதை மனப்பாடமாக வைத்து ஒரு நோட்டில் குறித்துக் கொண்டான்.
கிரிக்கெட் விளையாட போகும் போது எடுக்கும் ரன்களை ஹிந்தியில் சொல்ல நண்பர்கள் வாயடைத் நின்றார்கள்.
டேய், எப்படி உன்னாலே முடியுது? எங்களுக்கும் சொல்லித் தர முடியுமா?, என்றார்கள். இவன் பெருமையாக இவனின் இராணுவ நண்பர் பற்றிச் சொல்லி, அவரிடம் அனுமதி கேட்ட பிறகு உங்களை எல்லோரையும் கூட்டிச் செல்கிறேன், என்று உறுதி அளித்தான்.
இந்த விடயம் எப்படியோ அங்கு பரவி, இங்கு பரவி அப்பாவின் காதுகளில் விழுந்தது. ஒரு நாள் இவன் குருவிடம் பாடம் கற்றுக் கொண்ட பின்னர் வீட்டுக்கு வரும் போது அப்பா கையில் பிரம்போடு காத்திருந்தார்.
" சகவாசத்தைப் பாரு. துரைக்கு இராணுவத்தில் ப்ரெண்டு கேட்குதோ", என்றபடி பிரம்பினால் விளாசித் தள்ளிவிட்டார்.


இனிமேல் அந்தப் பக்கம் போ இருக்கு கச்சேரி. அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்து வராதுப்பா", என்றார் அப்பா விழிகளை உருட்டியபடி.
அதன் பிறகு இவனின் ஹிந்தி கற்றுக் கொள்ளும் ஆசையும் போய்விட்டது. வழியில் எங்காவது அந்த இராணுவ வீரனை கண்டால் தலை குனிந்தபடி கடந்து சென்றுவிடுவான். அவரின் பெயரை இவன் கேட்டதில்லை. அவரின் பெயர் பொறிக்கப்ப்பட்ட அடையாள அட்டையில் விரேந்திர சிங் அல்லது லாலா சிங் என்ற பெயர் மட்டும் ஞாபகம் இருந்தது.  சிங் மாமா என்பது மருவி சிங்கு மாமா என்ற அந்த நபரும் காலப் போக்கில் மறைந்து போனார்கள். நெடிய உருவம், தீர்க்கமான கண்கள்,  கூரான நாடி  என்று அவரின் உருவம் இப்பவும் ஞாபகம் இருந்தது. அவர் சொல்லிக் கொடுத்த நம்பர்கள் மட்டும் அப்படியே மனதில் பதிந்து இருந்தது. மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆசை, தாகம் மட்டும் தணியவில்லை. வெளிநாடு வந்தபிறகு ப்ரெஞ், ஸ்பானிஷ் கற்றுக் கொண்டான். இப்ப ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டான். 



அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, வகுப்பில் இணைந்து கொண்டான்.
முதல் நாள் வகுப்பு முடிந்து வந்ததும் மகள் கேட்டாள், "அப்பா, உங்கள் டீச்சர் பெயர் என்னப்பா?", என்றாள்.
" சிங்கு மாமா", என்றான் புன்முறுவலுடன். வகுப்பில் ஆசிரியர் சொன்ன பெயர் எதுவும் மனதில் பதியவில்லை. நெடிய உருவம், தீர்க்கமான கண்கள், கூரான நாடியுடன் இருந்த அவரின் பெயர் "சிங்கு மாமா" தான் எப்போதும் செழியனுக்கு.