லீசா, ஆன், ஜெனிபர், லீனா நால்வரும் இணைபிரியாத தோழிகள். ஜெனிபர் சிங்கிள் மதருக்கு ( கணவனால் கைவிடப்பட்ட பெண் ) ஒரே பெண். இவரைத் தவிர மற்ற மூவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். லீசாவின் தந்தை மனநல மருத்துவர், ஆனின் தந்தை ஒரு மிகப் பெரிய கம்பெனியின் தலமைப் பதவியில் இருப்பவர்.
இவர்கள் மூவரும் குடியிருப்பது வசதியானவர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதி. பல மில்லியன் டாலர் விலையுள்ள வீடுகள் இவர்களுடையது. வாழ்வில் எல்லாவிதமான வசதிகளும் நிறையவே இருந்தன.
*******
கன்வீனியன்ட் ஸ்டோரில் முகமூடி அணிந்த ஒருவர் நள்ளிரவில் நுழைகிறார். அங்கு கல்லாவில் நின்றவரின் முகத்திற்கு நேராக துப்பாக்கி காட்டப்படுகிறது. கல்லாவில் நின்றவர் நடுங்கியபடியே இருந்த பணத்தை எல்லாம் எடுத்து முகமூடி அணிந்திருப்பவரிடம் கொடுக்கிறார். இது போல வேறு கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறிவிட்டார்கள். குறைந்தது 3,4 நபர்களாவது இச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது பொலீஸாரின் கருத்து. கடையில் பொருத்தப்பட்ட காமராவில் முகமூடி அணிந்திருந்தவரின் குரல் தெளிவாக பதிந்திருந்தது.
சில மாதங்கள் கடந்த பின்னர் காவல் துறைக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது. அந்த கொள்ளையர்கள் லீசா, ஆன், ஜெனிபர், லீனா என்பதே அந்த தகவல். காவல்துறை விசாரணையை தொடங்கியது. இதில் லீனா தவிர மற்றவர்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். கொள்ளைக்கு காரணம் பணத்தேவை.
வசதியாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை நிலவியது இந்த டீன் ஏஜ் பெண்களுக்கு. லீசா தான் இந்த கூட்டத்திற்கு தலைவி. அவரின் யோசனையின் படியே மற்றவர்களும் செயல்பட்டனர். லீசா முகமூடி அணிந்து கொள்ள, இவர்கள் கொள்ளை அடித்த பிறகு தப்பிச் செல்ல கார் ஓட்டியர் லீனா.
இவர்களின் சார்பில் வாதாட வக்கீல்கள். எதிர்தரப்பில் வாதாட ஒரு வக்கீல். எதிர் தரப்பு வக்கீல் மிகவும் திறமையாக வாதாடினார்.
மில்லியன் டாலர்கள் சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் யாராலும் சட்டத்தை விலை கொடுத்து வாங்க முடியவில்லை.
கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் தாரளமாக செலவு செய்தனர். பார்ட்டிகளுக்குப் போய் மது வகைகள் உட்கொண்டு விட்டு, மப்பில் இவர்கள் நண்பர்களிடம் உளறிக் கொட்டினார்கள். நண்பர்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள்.
குற்றத்தை ஒப்புக் கொள்ளாத லீனா தவிர மற்ற மூவருக்கும் ஜூரி எனப்படும் மக்களின் தீர்ப்பிற்காக காத்திருந்தார்கள். சில வழக்குகளில் இந்த ஜூரியின் தீர்ப்பே இறுதியானது. ஜூரியில் சாதரண பொதுமக்களில் 6 - 12 பேரை தேர்வு செய்வார்கள். இந்த 6- 12 பேரும் வழக்கு முடியும் வரை நீதிமன்றம் செல்வார்கள். விவாதங்கள், சாட்சிகள், தடயங்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். தடயங்கள், சாட்சிகள் எல்லாமே இவர்களை திருப்திப்படுத்த வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வு இவர்களின் கையில் இருக்கும் போது இவர்கள் மிகவும் யோசித்தே தீர்ப்பு சொல்வார்கள். இறுதியில் இவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடிப் பேசி, தீர்ப்பை எழுத்து மூலம் நீதிபதிக்கு அளிப்பார்கள். இவர்களின் தீர்ப்பை மாற்றியமைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
இவர்கள் குற்றவாளிகள் என்பதே ஜூரியின் தீர்ப்பு. லீனாவிற்கு 7 1/2 வருடங்களும். மற்ற மூவருக்கு தலா 7 வருடங்களும் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நால்வரும் வாழ்க்கையில் இனிமேல் அழவே கண்ணீர் இருக்குமா என்று எண்ணுமளவிற்கு அழுது தீர்த்தார்கள்.
வசதியான பகுதியில் குடியிருந்தாலும் பொழுது போக்கிற்கு மால், தியேட்டர்கள் எவையுமே அங்கு இருக்கவில்லை. ஒரே ஒரு பொழுது போக்கு நண்பர்கள் சேர்ந்து பார்ட்டி வைப்பது. பெற்றோர்கள் பணம் பணம் என்று அதன் பின்னே ஓட, இவர்கள் வாழ்வில் அணைத்துக் கொள்ள யாரும் இல்லாமல் தீய வழியில் சென்று விட்டார்கள்.
கடைசியில் நீதிபதி, " நீங்கள் எவ்வளவு வசதியான வீட்டில் குடியிருக்கிறீர்கள் அல்லது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என்பது இங்கு முக்கியமில்லை. நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு மரண பயத்தை உண்டாக்கினீர்கள். " - என்று பஞ்ச் டயலாக்குடன் வழக்கினை முடித்தார்.
தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா?
( இது உண்மைச் சம்பவம். சில மாதங்களின் முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த நிகழ்ச்சி இது.
)