Sunday, October 3, 2010

இனிமேல் வசந்தம் ( சவால் சிறுகதை )

கிழக்கு வானில் சூரியன் எழும்ப முன்பு காமினி எழுந்து விடுவாள். சனி, ஞாயிறு என்று ஒரு நாள் கூட ஓய்வெடுக்க முடியாத வாழ்க்கையை நினைத்தால் வெறுப்பாக இருந்தது. இந்நேரம் மீன் பிடிக்க போன படகுகள் திரும்பி வந்திருக்க வேண்டும். கரையில் காத்திருந்து, மீன்களை பேரம் பேசி வாங்கி, சந்தைக்கு கொண்டு சென்று விற்று வர வேண்டும். நண்டும் சிண்டுமாக 4 குழந்தைகள். கணவன் சிவா மொடாக்குடியன். அவனிடமிருந்து பணத்தை பாதுகாக்க மிகவும் கஷ்டப்படுவாள். அரிசிப்பானை, தவிட்டுப்பானை இப்படி எதில் பணத்தை ஒளித்து வைத்தாலும் கண்டு பிடித்து, குடித்தே அழித்து விடுவான்.
பக்கத்து வீட்டு பார்வதி அக்காவிடம் பணத்தை குடுத்து வைப்பாள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வாள்.

மப்பில் புலம்பிக் கொண்டிருந்த கணவனை வெறித்துப் பார்த்தாள்.
"ஏய்! இந்தாயா, எழுந்திரு ", என்று அதட்டினாள்.
" ம்ம்ம்.... இப்பதானே படுத்தேன். அதுக்குள்ள சூரியனை யார் வரச் சொன்னா.... ", என்றான்.
" சோறாக்கி வைச்சிருக்கேன். பிள்ளைகளுக்கும் குடுத்து, நீயும் சாப்பிடு. 9 மணிக்கு பள்ளிக் கூடம் திறந்திருவாங்க. பிள்ளைகளை சாப்பிட வைச்சு, பள்ளிக்கு அனுப்பிடு. சரியா?", என்ற காமினியை அலுப்புடன் பார்த்தான் சிவா.

" ம்ம்...நீ கிளம்பு ", என்று அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இன்னும் தூக்கம், மப்பு எல்லாமே மீதி இருந்தன.


ஓலைப் பெட்டியை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாள். கடற்கரையினை நோக்கி நடையினை எட்டிப் போட்டாள். குளிர்காற்று உடம்பில் ஈட்டியாக குத்தியது. அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது. கடற்கரை ஆளரவம் அற்று அமைதியாக இருந்தது. இன்று வெள்ளனவே வந்து விட்டேனா என்று எண்ணியபடியே சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளின் இடையில் போய் மறைவாக அமர்ந்து கொண்டாள். குளிரிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. கொண்டு வந்த போர்வையினால் நன்கு மூடிக் கொண்டாள். தூக்கம் மெதுவாக தாலாட்டியது.
சில மணித்துளிகள் கடந்திருக்கும் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தாள். யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. வந்த உருவம் இவள் ஒதுங்கியிருந்த படகுகளின் பக்கம் வந்து ஒளிந்து கொண்டது. பயம் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்தாள். தூரத்தில் டார்ச் வெளிச்சத்துடன் சிலர் வருவது தெரிந்தது.

வந்தவர்கள் இவள் ஒதுங்கியிருந்த படகின் பக்கம் வந்தார்கள்.

" ஏய்! யார் நீ ?", என்றான் ஒருவன்.
இவள் பயத்துடன் போர்வையை விலக்கினாள்.
" இந்தப் பக்கம் யாராச்சும் போனதை பார்த்தாயா?", என்றான் இன்னொருவன். முகத்தில் விழுந்த டார்ச்சின் வெளிச்சம் கண்களை கூசச் செய்தது.
" இல்லையே. நான் பார்க்கலை ", என்றாள்.
"வந்து தொலைங்கடா. அவன் இந்நேரம் எங்கயாச்சும் பறந்திருப்பான். ஒரு வேலையாச்சும் ஒழுங்கா செய்ய தெரியுதா. முட்டாள் பசங்க ", என்று ஒருவன் கத்தினான்.
அவர்கள் அகன்றதும் அந்த உருவம் படகுகளின் மத்தியிலிருந்து எழுந்து வந்தது.
" அவனுங்க போய்ட்டாங்களா ?", என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

"ம்ம். நீ யாரு? ஏன் இப்படி ஓடி, ஒளிய வேண்டும் ?... ", என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டவளை இடைமறித்தான் அவன்.

" எல்லாம் சொல்றேன். என் கால்களில் காயம். அவங்க சுட்டதில் காலில் குண்டு பாஞ்சு....", என்று தொடர்ந்தவனை கலக்கமாக பார்த்தாள்.
" வா ஆஸ்பத்திரிக்கு போலாம். ", என்றாள் காமினி.
" அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். எனக்கு ஒரு உதவி செய்வாயா?. என்னிடம் ஒரு சின்ன பொதி இருக்கு. இதை நான் ஒருவரிடம் சேர்க்க வேண்டும். இதைக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போக முடியாது. ", என்றவனை இடைமறித்தாள்.

" என்ன பொதி? என்னை நம்பி எப்படி இதை ஒப்படைக்கிறாய்? நான் திரும்ப தருவேன் என்பது எவ்வளவு தூரம் நம்புகிறாய் ", என்று மீண்டும் கேள்விகள் கேட்டாள்.
" இதப்பாரும்மா. எனக்கு உன்னை விட்டா இங்கு வேறு யாரும் இல்லை. உன்னை நான் நம்புகிறேன். அதோடு உன்னை இங்கு, சந்தையில் அடிக்கடி பார்த்திருக்கேன். நீ கவலைப்பட வேண்டாம். இதை நீ சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். உன் பிள்ளைகள், நீ நலமாக இருக்கலாம்.", என்றான். ஆண்களும், பெண்களும் கும்பலாக வர ஆரம்பித்து இருந்தார்கள். லேசான வெளிச்சத்தில் அவனின் முகம் ஓரளவு தெரிந்தது. பழகிய முகம் போல தெரிந்தது. ஆனால், எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவில்லை.

மீண்டும் தூரத்தில் டார்ச் வெளிச்சம் தெரிய, அவசரமாக எழுந்து, எதிர் திசையினை நோக்கி ஓடினான். இவள் மடியில் கிடந்த பொதியை கலக்கத்துடன் பார்த்தாள்.

அன்று முழுவதும் காமினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. இந்தப் பொதியினை எவ்வாறு கணவனிடமிருந்து காப்பது என்று யோசித்து பைத்தியம் பிடிக்கும் அளவிற்கே வந்து விட்டாள்.

மீன் கூடையினுள் வைத்து, மேலே பொருட்களை பரவி வைத்தாள். சிவா மீன் கூடையின் பக்கம் போவது குறைவு. காமினி அங்கெல்லாம் பணத்தினை மறைச்சு வைக்கமாட்டாள் என்று நம்பினான் சிவா.
ஒரு நாள் பகல் முழுவதும் அந்தப் பொதியினை காப்பாற்றி விட்டாள். இரவு சிவா மப்பில் இருந்தபடியால் பெரிதாக பிரச்சினை ஏற்படவில்லை.
அடுத்த நாள் பொதியினை உரியவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று நம்பினாள். அடுத்த நாள் அடுத்த வாரம் ஆகியது ஆனால் யாரும் வரவேயில்லை. உள்ளே என்ன இருக்கும்? திறந்து பார்த்தால் என்ன? என்று அடிக்கடி நினைப்பாள். என்ன இருந்து தொலைத்தால் எனக்கென்ன? என் வேலை முடிஞ்சதும் அவர்கள் குடுக்கும் பணத்தை வாங்கினால் பிள்ளைகள் வயிறார சாப்பிடுவார்கள் என்று நினைத்தாள்.

சந்தையில் வருவோர் போவோரை எல்லாம் இவன் தான் அந்த நபராக இருக்குமோ என்று பார்ப்பாள். ஆனால், அவர்கள் கடந்து போனதும் வாடிப்போய் விடுவாள். போலீஸில் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.


நாட்கள் வாரங்களாகியது யாரும் வருவதற்கான அறிகுறியே இருக்கவில்லை. இந்த வாரம் இந்தப் பொதியினை போலீஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள் காமினி.
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டவளை சிவா வழிமறித்தான்.
" கலக்டரம்மா, எங்கே கிளம்பிட்டீங்க? கொஞ்ச நாளா நானும் தான் பார்க்கிறேன். உன் செய்கைகள் ஏதோ வித்யாசம் தெரியுது. என்ன திருட்டு வேலை செய்கிறாய் ? ", என்று அதட்டினான்.
" இல்லையே. நான் என் அம்மா வீட்டிற்கு போறேன். நீயும் வருகிறாயா? ", என்றாள்.
" ஆஹா! உங்க அம்மா வீட்டிலை பாலாறும் தேனாறும் ஓடுதாக்கும். நீயே போய் குடி? ", என்றான் எகத்தாளமாக.
" ஆனா, என்னை மீறி ஏதாச்சும் திருட்டு வேலை செஞ்சே கொன்னுபோடுவேன் ", என்றபடி வெளியே சென்ற சிவாவை கவலையுடன் பார்த்தாள் காமினி.

பிள்ளைகளை அம்மா வீட்டில் விட்டு விட்டு பேருந்து நிலையம் வந்தாள். காலையில் சாப்பிடாத களையினால் மயக்கமாக வந்தது. காலடியில் பூமி நழுவுவது போன்ற உணர்வு உண்டானது. சுதாகரித்து அமர்வதற்குள் கீழே விழுந்தது மட்டும் ஞாபகம் இருந்தது. எழுந்து பார்த்த போது ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்திற்கு மாஸ்க், வயர்கள் மாட்டி விட்டிருந்தார்கள். வெளியே பேச்சுக் குரல் கேட்டது. சிவா டாக்டரிடம் ஏதோ மெதுவான குரலில் சொன்னது காதில் விழுந்தது. இவன் இங்கே எப்படி வந்தான் என்று யோசனை ஓடியது. காமினி தன்னுடைய மஞ்சள் பையை தேடினாள். பக்கத்தில் மேசையில் பையைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. எடுத்து தலையணைக்கு அடியில் திணித்துக் கொண்டாள்.அறையினுள் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்க கண்களை மூடிக் கொண்டாள்.
" ஏன்பா, உன் மனைவியா இவங்க", இது டாக்டர்.

"ஆமாங்கய்யா. ஏன் கேட்கிறீங்க? ", என்றான் சிவா.

" இவங்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தசோகை நோய் இருக்கு. இவங்க வீட்டிலை என்ன சாப்பிடுறாங்க... ", என்று கேள்விகள். மீண்டும் கேள்விகள்.
சிவா வாய் பேசாது மௌனம் காத்தான். காமினி வெளியே கிளம்பியதும் ரகசியமாக பின் தொடர்ந்த கதையினை எப்படி டாக்டரிடம் சொல்வது என்று நினைத்தபடி தலையினை சொறிந்து கொண்டு நின்றான்.
" சும்மா தேமேன்னு நிற்காம நான் சொன்ன மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் வாங்கி வாங்க. ம்ம்.. சீக்கிரம்", என்ற மருத்துவரின் குரலுக்கு விரைந்தோடினான்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். கீழே விழுந்தவள் சுதாகரித்து எழவும், சிவா துப்பாக்கியுடன் நிற்கவும் சரியாக இருந்தது. காமினி, மன்னிச்சுக்கோ... எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

" காமினி, அந்த பையை என்னிடம் கொடு", என்றான் சிவா.
" முடியாது", என்று மறுத்தாள் காமினி.
" இதில் வைரம் இருக்கு. பல இலட்சங்கள் தேறும். போலீஸில் ஒப்படைத்தால் உனக்கு 1000, 2000 ரூபாய்கள் குடுப்பார்கள். நம்ம இப்படியே எங்காவது ஓடிப்போயிடலாம் வா", என்று கெஞ்சிய சிவாவை கேள்விக் குறியுடன் பார்த்தாள் காமினி.

" உனக்கு எப்படி தெரியும் வைரம் பற்றி?", என்றாள் காமினி.
" நேற்று ஒருவனை மீட் பண்ணினேன். அவன் தான் மப்பில் உளறிக் கொட்டினான். ஏதோ வைரம், கடற்கரை, பெண் என்று சம்பந்தம் இல்லாமல் பேசினான். நான் அவனுக்கு மேலும் சரக்கு வாங்கி குடுத்தேன். எல்லாத்தையும் அப்படியே ஒப்புவித்தான். வைரம் கிடைத்தால் நாங்கள் மூவரும் பங்கு போட்டுக் கொள்வதாக பேச்சு. நானும் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன். எங்கையாச்சும் கண் காணாத இடத்திற்கு போய் நிம்மதியா இரு...", என்று நிறுத்தாமல் பேசினான்.


காமினி பதில் சொல்லாது தயங்கி நின்றாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் சிவா மஞ்சள் பையை பறித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தான். காமினி ஒரு கணம் தயங்கி, பின் அவன் பின்னே ஓடினாள். வேகமாக ஓடியவன் சாலையினை கடக்க முற்பட வேகமாக வந்த காரில் மோதி, தூக்கி வீசப்பட்டான். காமினி அதிர்ந்து போய் நின்றாள். சில நொடிகளில் அங்கு கூட்டம் கூடி விட்டது. சிவா மஞ்சள் பையினை அணைத்தபடி உயிரை விட்டிருந்தான். காமினி மெதுவாக கூட்டத்திலிருந்து நழுவினாள்.

கடற்கரை காற்று இதமாக வீசியது. மெதுவாக நடை போட்டவளை யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

"காமினி, நான் தான் பரந்தாமன். வைர வியாபாரி. சில வாரங்களின் முன்பு உங்களிடம் வைரம் குடுத்தவன் என் நண்பன் தான். அவன் அதிக இரத்தப் போக்கினால் இறந்து விட்டான். போன வாரம் தான் அவன் எனக்கு அனுப்பிய தகவல் கிடைத்தது. உங்களை தேடிக் கண்டு பிடிக்க நாளாகிவிட்டது. என்னிடமிருந்து வைரத்தினை ஒரு கும்பல் கொள்ளையடித்தார்கள். வைரத்தினை விற்க போன இடத்தில் தகராறு வந்து போலீஸ் வரை போய் விட்டார்கள். அந்த கும்பலில் ஒருவனாக இருந்து செயல்பட்டவன் தான் அன்று நீங்கள் கடற்கரையில் சந்தித்தவன். வைரத்தை கொண்டு வந்து குடுத்தால் இலட்ச ரூபாய்கள் தருவேன் என்று பேரம் பேசினேன். அவன் வைரத்தை கொண்டு வரும் வழியில் தான் அவனை சுட்டுக் கொன்று விட்டார்கள். மீதிக் கதை தான் உங்களுக்கு தெரியுமே ", என்று முடித்துக் கொண்டார் பரந்தாமன்.

காமினி தயங்கி நின்றாள்.
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"இல்லை. என்னிடம் வைரம் இல்லை. இப்ப அது போலீஸ் கையிலை தான் இருக்கு.", கணவர் பறித்துக் கொண்டு ஓடிய மஞ்சள் பையில் இருந்ததையும். அவன் விபத்தில் இறந்த சம்பவத்தினையும் சொன்னாள்.
பரந்தாமன் தலையில் கை வைத்துக் கொண்டு, கீழே அமர்ந்து கொண்டார்.

காமினி பதில் சொல்லாது தூரத்தில் சூனியத்தினை வெறித்தபடி நின்றாள்.

பரந்தாமன் அந்த இடத்தினை விட்டு அகன்றதும் உள்பாவடையில் பத்திரமாக வைத்திருந்த வைரத்தினை எடுத்தாள். பிரிகாமல் இருந்த பொதியினை வெறுப்புடன் பார்த்தாள். போலீஸ் நிலையம் நோக்கி நடந்தாள். போலீஸ் உண்மையான உரிமையாளரிடம் வைரத்தினை ஒப்படைத்தார்கள். பரந்தாமன் திருட்டு கும்பலை சேர்ந்தவன் என்று பின்னர் அறிந்து கொண்டாள்.

வைர வியாபாரி இவளின் நேர்மையினை பாராட்டி ஒரு இலட்ச ரூபாய் பணமும், அழகான வீடும் பரிசாக கொடுத்தார். வீட்டிற்கு வசந்தம் என்று பெயர் சூட்டினாள்.வழக்கமான ஆரவாரம் மிக்க வாழ்க்கையிலிருந்து விலகி, ஊட்டி போகும் வழியில் வைர வியாபாரி அன்பளிப்பாக குடுத்த வீட்டில் அவளும் பிள்ளைகளும் மட்டும். வீட்டினை ஒட்டி இருந்த இடத்தில் வருமானத்திற்கு அழகான, சிறிய மளிகை கடை. இனி காமினியின் வாழ்வில் வசந்தம் மட்டும் வீசும்.

19 comments:

 1. முடிவு ரொம்பப் பிடிச்சு இருக்கு

  ReplyDelete
 2. அருமையான கதை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. கதை அருமை வானதி! முடிவு நன்றாக இருக்கு.ஆல் த பெஸ்ட்!

  ReplyDelete
 4. கதை நன்றாக இருக்கிறது. முடிவு சூப்பர். அப்போ நான் எழுதுன கதைகளுக்குப் பரிசு கிடையாதா?:(

  ReplyDelete
 5. அருமையான கதை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சிறந்த நடையில் நல்ல கதை தோழி.

  ReplyDelete
 7. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

  ReplyDelete
 8. அருமையான முடிவு!

  ReplyDelete
 9. அருமையான கதை+முடிவு!! வாழ்த்துக்கள் வானதி!!

  ReplyDelete
 10. முடிவு நன்றாக இருக்கு வானதி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வணக்கம் +மோசு
  கதை நல்லாயிருக்கு பதிவுக்கு நன்றி தோழி
  வைரம் கிடைத்தால் தான்
  வசந்தமா
  ஒரு சொம்பு கூழும்
  ஒரு மிளகாயும்-எனக்கு
  வசந்த காலத்தையே
  வென்றிடுவேன்

  ReplyDelete
 12. நல்லா இருக்கு கதை. ;))

  ReplyDelete
 13. கதை நல்லா வந்திருக்கே!! வாணி வெற்றி உங்களுக்கு தான் என்று சொன்னா வெற்றி உங்களை தேடி வரும்!! ரைட்டு..

  ReplyDelete
 14. கதை நல்லா போனது வானதி.. விவரணை எல்லாம் உணர்ந்து எழுதின மாதிரி இருந்தது.. //குளிர்காற்று உடம்பில் ஈட்டியாக குத்தியது. // யப்பா.. நல்ல வார்த்த சொன்னீங்க இந்தக் குளிருக்கு..

  முடிவு?? ம்ம்..

  ReplyDelete
 15. கதை எழுத உங்களுக்கு சொல்லனுமா என்ன ..?..சூப்பர் இடியாபம் மாதிரி குழப்பி விட்டு ஈஸியா சாப்பிட வச்சிட்டீங்க..!! :-))

  ReplyDelete
 16. வாணி.. கதை சூப்பர்..
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :-)))

  ReplyDelete
 17. வாணி.. கதை ரொம்ப நல்லாருக்கு.. கதை ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது. ரொம்ப நல்லாருக்கு வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

  http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!