Monday, June 25, 2012

குழப்பவாதிகளா? சிந்தனைவாதிகளா?

காரினை எங்காவது பார்க்கிங்கில் விட்டுட்டு போய் இருக்கிறீங்களா?.பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது & இது என்ன கேள்வி என்று முறைக்கப்படாது.  இப்ப இது பற்றி தான் நான் சொல்லப்போகிறேன்.

 சில மாதங்களின் முன்னர் கடைக்கு சென்றபோது என் ஆ.காரர் எங்கள் காரினை குறிப்பிட்ட இடத்தில் நிற்பாட்டிய பிறகு உள்ளே குரோசரி வாங்கச் சென்றுவிட்டார். நான் கொஞ்சம் தலைவலி காரணமாக காரில் இருந்துவிட்டேன். வின்டர் மற்றும் நான் எடுத்த டாப்லட்டின் வீரியத்தினால்  ஒரு குட்டி தூக்கம் போட நினைத்து... அப்படியே தூங்கியும்விட்டேன்.
ஏதோ  சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. ஒரு ஆசாமி எங்கள் கார் கதவினை திறக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பயத்தில் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு , நாக்கு வறண்டு போனது. செல் போனை தேடினால் கையில் அகப்படவில்லை. என் ஆ.காரர் எப்போதும் திட்டுவார் செல் போனை மறக்காமல் கையில் வைத்திருங்கோ என்று. இப்ப தான் அவரின் அறிவுரை மூளைக்கு எட்டியது. ஆசாமி இன்னும் வேகமாக கதவினை திறக்க முயற்சி செய்தார். வின்டர் நேரமாகையால் வெள்ளனவே இருட்டிக் கொண்டுவிடும். பாஸஞ்சர் சீட்டில் நான் இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே. சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது. அவர் காரைத் தான் கடத்தப்போகிறார் போல என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்.


இப்ப வேகமாக நான் இருந்த பக்கம் வந்தார் அந்த ஆசாமி. பெரிய ஆஃபிஸர் போல கோட், சூட், டை எல்லாம் போட்டிருந்தார் அந்த அமெரிக்கர்.
அடச்சே இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகுது என்று நினைத்துக் கொண்டேன்.
இப்ப  என் பக்க கதவினை பலம் கொண்ட மட்டும்  திறந்தார். காரின் கதவினை லாக் செய்து இருந்தாலும் நான் கதவினை திறக்காமல்  கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவர் கையில் இருந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்துவதும், பிறகு டென்ஷன் ஆவதுமாக இருந்தார்.
திடீரென்று அவரின் செய்கைகள் ஒரு முடிவுக்கு வந்தது. என்னை அப்போது தான் முதன்முறையாக பார்த்தவர் கொஞ்சம் மிரண்டு பின் வாங்கினார். என் காரினுள் இவள் எப்படி என்று அவரும்? இவர் மட்டும் என் கையில் மாட்டினால், மகனே! சட்னிதான் என்று நானும் நினைத்துக் கொண்டோம்!!!!.

திரும்பி பக்கத்தில் இருந்த காரினை பார்த்தார். நானும் அப்போது தான் கவனித்தேன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் எங்கள் காரினைப் போல அதே கலர், அதே நிறுவனம்... இப்படி பல ஒற்றுமைகள். இப்ப தான் எனக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணீர் வந்தது. ஆனால், ஆசாமி எங்கும் போகாமல் அங்கேயே நின்றார். என்னிடம் மன்னிப்பு கேட்க நிற்கிறாராம் அவர். அவர் பம்மிய பம்மில் நான் அறிந்து கொண்டாலும் கதவினை திறக்கும் தைரியம் வரவில்லை. பரவாயில்லை என்று கைகளினால் சைகை செய்தேன்.  குலதெய்வத்தினை கும்பிடுவது போல என்னை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
நான் எப்பவும் பார்க்கிங்கில் காரை நிப்பாட்டினால் இடத்தினை மனதினுள் குறித்துக் கொள்வேன். அதோடு காரின் நம்பர் எப்பவும் மனப்பாடமாக வைத்திருப்பேன். நேற்றுக்கூட குரோசரிக் கடையினுள் இருந்து வேகமாக வந்த ஒருவர் ரிமோட்டினை கையில் எடுத்து, பொத்தானை அழுத்தியபடி 2 தரம் சுற்றி வந்தார்.  நான் காரின் பக்கம் போனதும் அவரின் காரினை நோக்கி வேகமாக நடந்தார். அதே கோல்ட் கலரில் அவரின் கார் தெரிந்தது. 

இப்படி இவ்வளவு குழப்பவாதிகளா இந்த நாட்டில் என்று வியந்து போனேன். ஆனால், பாருங்கள் இப்ப என் ஆ.காரரும் இந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார். கையில் ரிமோட்டினை வைத்து அது கதறும் வரை அழுத்துவது அல்லது ஏதோ ஒரு கட்டத்தின் பின்னர் இது நம்முடைய பொருள் இல்லை என்று விலகிப்போவது. குழப்பவாதிகள் அல்ல சிந்தனைவாதிகள் என்று இப்ப நினைத்துக் கொள்வேன். அதாவது சதா சர்வகாலமும் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தான் இவர்கள் இப்படி ( குழப்பவாதிகளாக) இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 


இதுக்கு ஒத்துப் போறாப்போல என் மகன் வரைந்து தந்த படம். கலர் கொடுத்தது என் மகள்.

Monday, June 4, 2012

சங்கிலிப் பேய்

சரட்..சரட்.. என்று சத்தம் இரவின் அமைதியை கிழித்துக் கொண்டு காதில் விழுந்தது. என்னவாக இருக்கும் பேயா? அல்லது பிசாசா? என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இது ஏதோ ஒரு ஆவியின் வேலையாக இருக்க வேண்டும். இரண்டு மாதங்களின் முன்பு செத்த சின்னவாளி கிழவியின் ஆவியா இருக்க வேண்டும் என்றார்கள். அது இருக்கும் போதே நகை, நகைன்னு பேயா அலைஞ்சு சொத்து சேர்த்துச்சு, இப்ப செத்த பிறகு அந்த நகைகளை போட்டுக் கொண்டு திரியுதோ என்று திகிலுடன் பேசிக் கொண்டார்கள்.

அந்தக் குக் கிராமத்தில் 30, 40 குடும்பங்கள் இருந்தார்கள். மின்சார வசதி இல்லாத 1950 களின் ஆரம்ப காலம். மண்ணெண்ணை விளக்குகள் தான் ஒரே ஒரு வெளிச்சம். மக்கள் நேரத்தோடு சாப்பிட்டு, உறங்கப் போய் விடுவார்கள். ஆண்கள் மீன் பிடித் தொழிலுக்கு போய் விட, ஊரில் பெரும்பாலான வீடுகளில் பெண்களும், குழந்தைகளுமே இருப்பார்கள்.

ஊர் அடங்கிய பின்னர் வீதியில் சங்கிலிகள் உராயும் சத்தங்கள் கேட்டன. முதலில் அதைப் பெரிதாக யாரும் எடுக்கவில்லை. யாரோ ஒருவர் கொழுத்திப் போட, அது பேய் உருவம் எடுத்தது. இரவில் பேய் உலவியதாக மக்கள் அதன் பிறகு நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உறங்கினர். வயதான பாட்டிகள் காவலுக்கு இருந்தார்கள். யாருக்கும் வெளியே எட்டிப் பார்க்கும் தைரியம் வரவில்லை. நிலவின் ஒளியில் ஒர் உருவம் சங்கிலிகளை இழுத்துப் போவது மட்டும் மங்கலாக தெரியும்.

சங்கிலிப் பேய் என்று நாமகரணம் சூட்டினார்கள். பூசாரி வந்தார். பல பூஜைகள் செய்தார். சின்னவாளிக் கிழவியின் வீட்டிலும் பூஜைகள் செய்யப் பட்டன. ஆனால் பேய் போன பாடு இல்லை. தினமும் இரவில் வந்து போனது. ஆண்கள் தொழிலுக்கு போகாமல் இருட்டில் பதுங்கி இருந்தார்கள்.

பேய்க்கு இந்த விடயம் காதுக்கு எட்டி விட்டது போல. இரண்டு நாட்களாக வரவில்லை.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் குடி இருந்தான் ஜெகன். களவு தான் அவன் தொழில். இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் தொழிலுக்கு போகவில்லை. மக்கள் தூங்கியதும் இவன் போய் மாடு, யானை தவிர கொல்லைப் புறத்தில் எதை கட்டி இருந்தாலும் ஈரச் சாக்கினை மிருகத்தின் மேலே போட்டு, இழுத்து வந்து விடுவான். போகும் போது ஈரச் சாக்கின் உள்ளே சங்கிலியை சுற்றி வைத்துக் கொள்வான். திருடி முடிந்ததும் சங்கிலியை தோளில் மாட்டிக் கொள்வான். மக்களை பயமுறுத்தவே அவ்வாறு செய்யத் தொடங்கினான்.


ஊரில் ஆண்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை தன் வீட்டில் இருந்தபடியே கவனித்தான் ஜெகன்.
வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே நோட்டம் விட்டான்.
என்ன நடக்கிறது? ஏதாவது காணவில்லயா?. என்றான் அப்பாவியாக.
உனக்கு தெரியாதா? ஊரில் உலவும் சங்கிலிப் பேயை மக்கள் பிடிக்கப் போகிறார்கள், என்றார் யாரோ ஒருவர் போகிற போக்கில்.
நல்லது. வாழ்த்துக்கள், என்றான் ஜெகன்.
எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். இரவு நெருங்க நெருங்க பர பரப்பு கூடியது.

நீ போகலையா சங்கிலிப் பேயை பிடிக்க, என்றான் ஜெகனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புக் குட்டி.
இல்லை என்று வேகமாக தலையாட்ட நினைத்தவன் ஏதோயோசனையின் பின்னர் பக்கத்தில் கிடந்த உருட்டுக் கட்டையுடன் கிளம்பினான். மனதுக்குள் சிரிப்பு வந்தது. ஊருடன் ஒத்து வாழ் என்று என் செத்துப் போன ஆயா சும்மாவா சொல்லிச்சு.

ஆண்கள் வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள். நான்கு பிரிவாக பிரிந்து ஒவ்வொரு திசையில் பேயைப் பிடிக்க அனுப்பபட்டார்கள். ஏதோ ஒரு பிரிவில் ஜெகனும் இடம் பெற்றான்.
புதரின் பின்னே மறைந்து இருந்தார்கள்.
ஜெகன் அப்போது தான் கவனித்தான் பக்கத்தில் இருந்தவர்களின் ஆயுதங்களை. சிலரின் கைகளில் கத்திகள், வீச்சரிவாள், ஈட்டி போன்று முனை சீவப்பட்ட கம்புகள், இன்னும் பல.
ஆண்டவா! நல்லவேளை நான் இரண்டு நாட்களா களவுக்கு போகவில்லை. இன்று வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அந்த சங்கிலியை ஆற்றில் தூக்கிப் போட வேண்டும், என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் சிரிப்பும் வந்தது. கெக்கே பிக்கே என்று சிரித்தான்.
டேய் பைத்தியம், சிரிக்கிற நேரமா இது?, என்று யாரோ இவனை அடக்கினார்கள்.
ம்ம்... நான் பைத்தியம்!!!,  என்று நினைத்தபடி உருட்டுக் கட்டையினை உறுதியாக பற்றிக் கொண்டான்.




Tuesday, May 22, 2012

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா, நலமா?  உங்களுக்கென்ன நலமாகத் தான் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் தான்  அநாதைகள்  போல் ஆகிவிட்டோம். நீங்கள் இருந்தபோதும் நாங்கள் அநாதைகள் தான் என்பது வேறு விடயம். எப்போதும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும்  முகம். பக்கத்தில் வந்தால் முதுகில் சரமாரியாக அடி விழும் என்ற காரணத்தினால் ஒரு  நான்கடி தள்ளி நின்றே எல்லோரும் பேசப் பழகிக் கொண்டோம். தப்பித் தவறி யாராவது மாட்டிக் கொண்டால் அந்த நபர் கதி அவ்வளவு தான். இப்படி உங்கள் மீது பழியை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு நாள் கூடத்தில் ஒரு அழகிய வெண்புறா வந்து நின்றது. இதைக் கண்ட என் பள்ளித் தோழி  ஸ்டெல்லா சொன்னாள், உனக்குத் தெரியுமா வெண்புறா வந்தால் வீட்டில் துர்மரணம் சம்பவிக்கும், என்றாள். நான் குழம்பி நின்றேன். யார் இறக்கப் போகிறார்கள். என்ன தான் கொடுமையான அம்மாவாக இருந்தாலும் நீ வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய பலம். நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையினை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சே! அப்படி இருக்காது என்று வெளிமனம் சொன்னாலும் உள்ளுக்குள்  பயமாக இருந்தது.
மற்ற அம்மாக்கள் போல விரும்பிய உணவுகள் செய்து கொடுத்ததில்லை. ஏதாவது சாப்பிட ஆசையாக இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து கேட்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. கேட்டால் நையப் புடைத்து விடுவாய். என் தங்கை, தம்பிகள் இப்படி உன்னிடம் அடிக்கடி அடி வாங்கியது கண்டு மனம் பொறுக்காமல் நானே அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் முழுக்க என் தலையில் சுமத்தி விட்டு நீ கட்டிலில் மட்டும் காலத்தைக் கழித்தாய்.

உனக்கு என்ன நோய் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அதை நீயும் எங்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. ஒரு வேளை தவறு எங்கள் மீது தானோ? உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ? அப்பாவிடம் கிடைக்காத அன்பு, காதல் எதையும் நீ எங்களிடமும் எதிர்பார்கவில்லையோ?
ஒரு நாள் பள்ளியால் வந்தபோது அப்பா வாசலில் நின்றார். அவரின் முகம் கலங்கி இருந்தது. எங்களை அணைக்க முயன்றார். அவரை விலக்கி உள்ளே ஓடினேன். அங்கே கூடத்தில் நீ. உயிரற்ற சடலமாக. ஆனால், உன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி உணர்வு. அப்படி ஒரு சாந்தமான முகத்தினை நான் அதற்கு முன்னர் கண்டதில்லை. ஒரு பெரிய பொதியாக கட்டி உன்னை எடுத்துச் சென்றார்கள்.

 இது வரை நான் வாழ்க்கையில் கண்டறியாத, கேட்டறியாத உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். போலியான சோகத்துடன் அவர்கள். பொய்யான சோகத்துடன் அப்பா. இடையில் நாங்கள் நால்வரும் செய்வதறியாது நின்றோம். நான் ஒரு உறவினர் வீட்டிலும், தங்கை வேறு ஒருவர் பராமரிப்பிலும், தம்பிகள் அப்பாவோடு செல்வதாக அவர்களே முடிவு செய்தார்கள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் தங்கை, தம்பிகளை வளர்க்க நீங்கள் எல்லோரும் யார், என்று கேள்வி கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
அப்படியே அம்மாவின் திமிர் இதுக்கும் வந்திருக்கு, என்று நொட்டை சொன்ன பிறகு அவர்கள் வழியில் போய் விட்டார்கள்.
அம்மாவின் திமிர் மட்டும் அல்ல. அவரின் மன உறுதியும் சேர்ந்தே வந்திருக்கு என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு உடன் பிறப்புகளை கவனமாக வளர்த்து கரையேற்றினேன்.
உன் திமிர், மன உறுதி மட்டும் அல்ல. உன் நோயும் எனக்கு வந்திருக்கு. ஆம். உனக்கு வந்த அதே மனச்சிதைவு நோய் எனக்கும் வந்திருக்கு.
இப்ப விளங்குகின்றது நீ எதற்காக அப்படி இருந்தாய் என்பது. உலகமே என்னைச் சுற்றி வந்தாலும் எனக்கோ எதையோ பறி கொடுத்தால் போல ஒரு உணர்வு. அழகிய மகள் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு எல்லோர் மீதும். இன்று  காலை வெய்யில் வீட்டினுள் வரக் கூட நான் அனுமதிக்கவில்லை.கதவு, ஜன்னல் திரைச்சேலை எல்லாம் மூடி விட்டு, இரூட்டில் இருக்கிறேன்.  இருட்டினையே அதிகம் விரும்புது மனது. நீயும் இப்படி இருட்டில் தானே இருந்தாய். 

காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது மகள் சொன்னாள், அம்மா, இன்று எனக்கு பிடிச்ச பைனாப்பிள் கேசரி செய்து வைப்பீர்களாம், என்று.  உனக்கு அது தான் ஒரு கேடு என்று நீங்கள் சொல்வது போல நினைத்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டே புன்னகை செய்தேன்.


தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் விளங்கும் என்பார்கள். நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று விளங்குது. ஒரே ஒரு முறை மீண்டும் அந்த நொடி... நீ தற்கொலை செய்ய நினைத்த அந்த  நொடிக்கு போகும் சக்தி எனக்கு இருந்தால், இப்பவே உன்னை அங்கே வந்து மீண்டும் கூட்டி வருவேனே. உன்னிடம் அன்பாக பேசி, உனது நோயின் காரணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. இந்தக் கொடிய நோய் உனக்கு, எனக்கு, எனக்குப் பின்னர் என் மகளுக்கு.... நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதே. உன் முடிவு உனக்கு மட்டும் விடுதலை தேடிக் கொடுத்தது. உன்னைப் போல நான் மட்டும் விடுதலை பெற விரும்பவில்லை. எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள் சௌம்யா.