Wednesday, December 15, 2010

தேவதையில் நான்.

என் எழுத்துக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் இனிய நன்றிகள்.
தேவதை இதழின் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள். பொறுமை மிகவும் அவசியம். சில நிமிடங்களில் ஒரு பிரபலமான, அழகான (!!!!) வலைப்பதிவர் திரையில் தோன்றுவார்;


சில மாதங்களின் முன்பு தேவதை இதழின் ஆசிரியரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். என் வலைப்பூவினை வெளியிட அனுமதி கேட்டிருந்தார்கள். விருப்பம் இருந்தாலும் ஒரு தயக்கம். தயக்கத்தின் காரணம் என் புகைப்படம் இணைத்து, வலைப்பூவினை வெளியிட இருப்பதாக சொன்னார்கள்.
உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் என் முகத்தினை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் அதற்கு ஏற்றாற்ப்போல என்னிடம் அழகான புகைப்படங்கள் இல்லை. என் மூஞ்சையும் அப்படி ஒன்றும் போட்டோ ஜெனிக் அல்ல. படுத்திருந்து யோசித்து, தூங்கி எழுந்தது தான் மிச்சம். என் இனிய தோழி ஸாதிகா அக்காவிடம் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரும் ஏன் போட்டோ அனுப்பினா என்னவாம் என்று பதிலுக்கு மெயில் அனுப்ப, நானும் என் கணவரை நச்சரித்து, குறைந்தது 20 படங்களில் தேறிய 2 மட்டும் அனுப்பி வைத்தேன்.

அன்புடன்
வானதி

Monday, December 13, 2010

உள்ளங்கை அரிப்பு.

காலையில் எழுந்தபோது இடது உள்ளங்கை லேசாக அரித்தது. அரித்தால் சொறிந்து கொள்ள வேண்டியது தானே என்று குதர்க்கமாக பேசக்கூடாது. பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். எனக்கு எங்கிருந்து பணம் வரும்.

பிறந்த நாள் ( வாய் நிறைய வாழ்த்து மட்டுமே கிடைத்தது )போன மாதம், திருமண நாள் அடுத்த மாசம் ..கை அரிப்பு இன்னும் அதிகமாகியது. ஏதாவது வியாதியாக இருக்கப் போவுது - இது என் கணவர்.
மகனை பள்ளிக்கு கூட்டிச் சென்ற போதும் இதே யோசனை.
ரோட்டினை கடக்க நின்ற போது கை மீண்டும் லேசாக அரிப்பு எடுத்தது.
அடடா! இங்கு தான் எங்கேயோ எனக்கு உரிய பணம் இருக்கு என்று மனசாட்சி அலறியது.
10 டாலர்கள் கிடைச்சா என்ன செய்வது... 20 டாலர்கள் கிடைச்சா ஒரு ப்ளான், 100 டாலர்கள் கிடைச்சா .. 100 டாலர்களை இழந்தவன் எப்படிக் கவலைப் படுவானோ என்று அவனுக்காக இரக்கம் உண்டானது.

ஸ்கூல் கார்ட் வாகனங்களை நிறுத்தி, ரோட்டினை கடக்க உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி மறு கரையினை அடைந்தோம்.


ஸ்கூலினை நெருங்கிய போது கீழே ஏதோ கடதாசி தென்பட்டது. நடை பாதையோரம் செடிகளின் மத்தியில் தென்பட்டது. உடனே பணம் தான் என்று என் மனசாட்சி சொல்லியது.
அது பணமே தான். தமிழ் சினிமாவில் கீழே கிடந்த பணத்தினை எடுக்க நம்ம ஹீரோக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சும்மா சொல்லக் கூடாது அது அத்தனையும் உண்மையே தான்.
எங்கள் பின்னாடி, முன்னாடி, பக்க வாட்டில் எல்லா இடமும் மக்கள் வெள்ளம். சிலர் ஒட்டினாற் போல பின்னாடியே வருவார்கள்.
ஷூ காலினை மேலே வைத்துக் கொண்டேன். கீழே லேஸ் கட்டுவது போல அமர்ந்து, மெதுவா காசை எடுத்து விட்டேன்.

அம்மா! எவ்வளவு பணம் கிடைச்சுது? என் மகனின் கேள்வி.
தெரியலையே ராசா?- இது நான்.
மெதுவாக பிரித்துப் பார்த்தேன். 5 டாலர் நோட்டு.

இதை என்ன செய்வது? பின்னாடி வந்த ஆசாமி என்னை முறைப்பது போல இருந்தது.
இவரும் பங்கு கேட்பாரோ தெரியவில்லை.
வேகமாக நடந்தேன்.

அம்மா! எம்பூட்டு பணம் இருக்கு - இது மீண்டும் மகனே தான்.
5 டாலர்கள் இருக்கு என்று 5 விரல்களை காட்டினேன்.

அதை இப்படிக் குடுங்க என்ற மகனிடம் மறுப்பு சொல்லாமல் குடுத்தேன்.


மகன் பணத்துடன் பள்ளியை நோக்கி வேகமாக ஓட, நானும் பின்னாடியே ஓடினேன்.

பள்ளியில் அலுவலக அறையில், இது யாருடைய பணம் என்று தெரியவில்லை? ரோட்டில் இருந்திச்சு. யாராவது அவர்களின் லன்ஞ் பணத்தினை தொலைத்து இருப்பார்கள். அவங்க இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? என்று என் மகன் மழலையில் சொல்ல, அதிபர் திறந்த வாய் மூட மறந்து நின்றார்.

ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பணத்தினை தவற விட்ட பொடியன் ஓடி வந்து, நன்றி சொல்லி பணத்தினைப் பெற்றுக் கொண்டான்.

தேசிய கீதம் பாடல் தொடங்க எங்கும் அமைதி நிலவியது.
நான் வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
கீழே கிடந்த பணத்தினை பொறுப்பாக கொண்டு வந்து கொடுத்த என் மகனின் பெயரினை ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள்.
அங்கிருந்த மரங்களில், செடிகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

Friday, December 10, 2010

என் தங்கைக்காக


கடல் தண்ணீர் கண்களில் பட்டதும் எரிச்சலாக இருந்தது. கனவா? உண்மையா என்று விளங்கவில்லை அகிலனுக்கு. எங்கும் மரண ஓலம் காதுகளை துளைத்து எடுத்தது. யாரைக் காப்பாற்ற, யாரை விட என்று சில நொடிகள் குழம்பி போனான். மறு நொடி பக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

"அண்ணா" என்ற குரல் அந்த இடமே அதிரும்படி எதிரொலித்தது. எப்படி என் தங்கையை மறந்தேன் என்று நினைத்துக் கொண்டான். அம்மா, தாத்தா இருவரும் எங்கே? யோசிக்க நேரம் இல்லை. தங்கையை காப்பாற்ற வேண்டும்.

இருள் பிரியாத காலை நேரம். கிட்டத் தட்ட 30 பேர் அளவில் இருக்கும். இதில் என் தங்கையை எங்கே தேடுவேன் என்று திகைத்து நின்றான். ஆனால், குரல் வந்த திசையினை வைத்து, அந்தப் பக்கம் நீந்தத் தொடங்கினான். யாரோ வேகமாக இவன் கையினைப் பற்றினார்கள். மரண பயத்தில் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. கையினை விலக்கப் போனான். தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அந்தப் பெண்ணின் கண்கள் கெஞ்சின. சிறிதும் தாமதிக்காமல் கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

**********************************

அகிலன், இன்று இரவு வள்ளத்தில் இந்தியா போகிறோம். ரெடியா இருக்க சொன்னார் ஓட்டி", என்றார் அம்மா.

அம்மா! இது 10 வது தடவை இருக்குமா? ஒவ்வொரு முறையும் போய் காத்திருந்து விட்டு, இரவானதும் திரும்பி வருவோமே. இந்த நாட்டிலேயே இருந்து செத்து போகலாம்" என்ற சொன்ன மகனை முறைத்தார் தாய்.

இல்லைப்பா! சாக பயப்படவில்லை. உன் தங்கை மேகலாவை நினைச்சா பயமா இருக்கு. சில மாதங்களின் முன்பு பக்கத்து தெருவில் கங்காவை இராணுவம் கொண்டு சென்றார்கள். இப்ப எங்கே என்றே தெரியவில்லை.", என்ற தாயை இரக்கத்துடன் நோக்கினான் அகிலன்.

" சரிம்மா. இன்று இரவு போகலாம். மேகலாவிடம் சொன்னீங்களா?", என்று வினவினான்.

" மேகலாக்கு எப்போதும் சம்மதமே. குடும்பத்திற்கு ஒரு பை தான் கொண்டு வர வேண்டும் என்று ஓட்டி கண்டிப்பா சொல்லிட்டார். உன் ஆடைகள் ஒரு செட் மட்டும் கொண்டு வாப்பா....", என்று பேசிக் கொண்டே போன அம்மாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

எதை விட, எதை எடுக்க என்று யோசிக்காமல் ஒரே ஒரு செட் உடையினை எடுத்து தாயிடம் நீட்டினான்.

இரவானதும் கடற்கரைக்கு போனார்கள். அமாவாசை இருட்டு. அம்மாவும், தாத்தாவும் அருகிலேயே நின்று கொண்டார்கள். தங்கை மேகலா இவனின் கையினை பற்றிய படியே நின்றாள். காற்று இதமாக வீசியது. தூரத்தில் கடற்படை கப்பலின் வெளிச்சப் பொட்டு மங்கலாக தெரிந்தது.
இன்று இந்தியா போக முடியுமா தெரியவில்லை என்று மனதினுள் எண்ணிக் கொண்டான்.

சுமார் 12 மணி அளவில் வள்ளம் வந்து சேர்ந்தது. நின்றவர்கள் சத்தம் போடாமல் ஏறிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பினை தாண்டும் வரை மெதுவாகவே வள்ளம் ஊர்ந்து சென்றது. இந்தியா கடற்பரப்பு வந்ததும் படகு வேகமாக செல்லும் என்று ஓட்டி அறிவித்தார். கடலில் எப்படித் தான் எல்லை தெரியுமோ என்று நினைத்துக் கொண்டான் அகிலன்.

சில மணிநேரங்கள் கடந்த பின்னர் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. அசுர வேகத்தில் சென்ற படகு நிலைகுழைந்து போனது. படகில் இருந்தவர்கள் நாலா புறமும் தூக்கி வீசப்பட்டார்கள்.

******************************
மீண்டும் அந்த இடத்திற்கு விரைந்தான். கால்களில் ஏதோ தட்டுப்பட மூச்சடக்கி உள்ளே மூழ்கினான். கைகளை பற்றினான். அது ஒரு பெண்ணின் கை என்பது விளங்கியது. வளையல்கள் தட்டுப்பட்டது. இது என் தங்கையின் வளையல்கள் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டான்.


தங்கைக்கு அப்பா ஆசையாக வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய வளையல்கள். சந்தேகமே இல்லை. இது என் தங்கை மேகலா தான். வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

வேகமாக பிடித்து இழுத்தான். ஆனால், பிடி நழுவியது. நுரையீரல் சுத்தமான காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மேலே போய் மூச்சிழுத்து உள்ளே வர நேரம் இருக்கவில்லை.
" அண்ணா! என்னை கைகளை பிடித்துக் கொண்டே இருங்கள். பிளீஸ்.. என்று மேகலா படகில் கெஞ்சியது ஞாபகம் வந்தது.

முன்பை விட இன்னும் அதிக பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஏதோ ஒரு அசுர சக்தி எதிர் திசையில் இழுத்துக் கொண்டே சென்றது. இப்போது அகிலனும் சோர்ந்து போயிருந்தான். மேலே போக எத்தனித்தான். மேகலாவின் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. மேகலாவுடன் சேர்ந்து அகிலனும் சமுத்திரத்தின் சுழலில் சிக்கிக் கொண்டான். தங்கையின் கையினை மட்டும் விடவில்லை. சமுத்திர அன்னையின் சுழலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டார்கள். அவளின் வெறி அடங்கியதும் காற்றில்லாத பந்துக்கள் போல மேலே மிதந்த இருவரையும் மீனவர்கள் தூக்கி கரையில் போட்டார்கள். மரணத்திலும் கை கோர்த்தபடியே இருந்த இருவரையும் கண்ட ஊரார்கள் அதிர்ந்து நின்றார்கள்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாயார் மட்டும் கரையில் இருந்த உயிரற்ற உடல்களை இனம் காண அழைத்து வரப்பட்டார். வாய் பொத்தி அழ ஆரம்பித்தவரை தேற்ற அங்கு அகிலனோ, மேகலாவோ இருக்கவில்லை.

(This story is based on an actual event that took place in the early 90's.)