Saturday, May 3, 2014

சாம்புவின் செல்லம்


சாம்புக்கு டென்ஷனாக இருந்தது. அட எனக்கு அப்படி என்ன டென்ஷன் என்று நீங்கள் நக்கலாக/சீரியஸாக நினைக்கலாம். கோயிலில் என் காதின் பக்கத்தில் இரைந்து கொண்டிருந்த லவுட் ஸ்பீக்கர், மேடையில் ஆடிய பெண்கள், நாடகம், பட்டிமன்றம், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் அரட்டை அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க, எனக்கு எரிச்சல் வந்தது. ஒன்றில் கை தட்டுங்கள் அல்லது மவுனமாக இருந்து தொலையுங்கள். உங்களுக்காக ஒரு கூட்டமே மேடையில் நின்று உயிரைக் கொடுத்து கத்திக் கொண்டிருக்க என்ன ஒரு அடாவடித்தனம் செய்கிறீர்கள்.
என் செல்லம் வீட்டில் என்னத்தை தின்னுச்சோ தெரியவில்லை. அம்மாவிடம் ஏற்கனவே 13 தரம் வீட்டுக்கு போகலாமா என்று கேட்டு, அவரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் மீண்டும் இரண்டு தரம் கேட்டு திட்டு வாங்கி, கதிரையில் முடங்கி கொண்டேன். ஏதோ பாட்டு கச்சேரி இருக்காம் அது முடியத் தான் வீட்டுக்கு போவது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். இன்னொரு முறை கேட்டால் அம்மா கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள் என்று பேசாமல் இருந்தேன். தங்கையை மெதுவாக கிள்ளிவிட்டேன். தங்கை பெருங்குரலில் அழ ஆரம்பிக்க, இப்ப கூட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்த என் அப்பா ஓடி வந்து தங்கையை தூக்கிக் கொண்டார். அப்பா வெளியே செல்ல நானும் அவருடன் இணைந்து கொண்டேன்.

வெளியே வந்த பிறகு என்னால் நிம்மதியாக யோசிக்க முடிந்தது. என் செல்லம் இப்ப என்ன செய்யும் வீட்டில். சாப்பிட்டிருக்குமா? அல்லது தப்பி ஓடி இருக்குமா? சே சே தப்பி ஓடாமல் ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஒரு பிளாஷ்டிக் பெட்டியை கவிழ்த்து வைத்துவிட்டுத் தானே வந்தேன். வரும் முன்னர் பென் & ஜெரிஸ் ஐஸ்கிரீம் ஒரு சட்டியில் வைத்து விட்டுத் தானே வந்தேன். அதை சாப்பிட்டுருக்குமா? அல்லது அதில் விழுந்து உயிரை விட்டிருக்குமா தெரியவில்லை.
"அப்பா, வீட்டுக்கு போகலாமா", என்றேன்.
"சாம்பு, அம்மா வந்ததும் போகலாம் சரியா?", என்றார்.
காரினுள் போய் அமர்ந்து கொண்டோம்.
சூரிய ஒளி கண்களை கூச எழுந்து அமர்ந்து கொண்டேன். எப்ப கோயிலில் இருந்து வந்தோம், எப்படி கட்டிலில் படுத்தேன்...இருங்கள் என் செல்லம்.. கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தேன். தெளிவான பிளாஷ்டிக் மூடி வழியாக பார்க்க முடிந்தது. என் செல்லம் ஐஸ்கிரீமை சீண்டக் கூட இல்லை. ஒரு ஓரமாக படுத்துக் கிடந்தது. ஒரு வேளை இறந்து விட்டதோ?  விரலால் மெதுவாக தடவிக் கொடுத்தேன்.


அசைவு தெரிந்தது. என் செல்லம் கடந்த திங்கள்கிழமை தான் என் செல்லப் பிராணியாக மாறினான். இல்லை இல்லை மாற்றப்பட்டான். அதாவது வேறு வழி இல்லாமல் என் செல்லப்பிராணியாக இருக்கிறான்.
புத்தகத்தில் குறிப்பிட்டது போல திங்கள் கிழமை ஒரு ஆப்பிள், செவ்வாய் கிழமை இரண்டு ப்ளம்...இவை எதையும் அவன் சீண்டவே இல்லை. பட்டினி கிடக்கிறான். எனவே புதன்கிழமை அவனுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தேன். அதையும் திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு வேளை சீஸ் கேக், கப் கேக் சாப்பிடுமா தெரியவில்லை. அம்மாவிடம் கப் கேக் கேட்டால் என்ன என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பிறகு என் செல்லப் பிராணியை தூக்கி எறிந்து விடுவார்கள். அம்மா, அப்பா இருவருக்கும் என் செல்லப் பிராணி வளர்ப்பு பற்றித் தெரியாது. உங்களுக்கு மட்டும் தான் சொல்கிறேன்.
ஒரு வேளை கூகிளில் ஏதாவது பதில் கிடைக்குமா? அட! என் செல்லப் பிராணி தோட்டத்தில் தானாக அலைந்து திரிந்து இலை, தழை இப்படி ஏதாவது சாப்பிடுமாம். அவை கட்டாயமாக தோட்டத்தில் தான் இருக்க வேண்டுமாம். அப்ப தான் அது ஒரு நாள் அழகிய வண்னத்துபூச்சியாக மாறுமாம். என் செல்லத்தை மெதுவாக கையில் எடுத்துக் கொண்டேன். பச்சைக் கலரில் பட்டுப் போல இருந்தது. மெதுவாக தோட்டத்தில் கொண்டு போய் விட்டேன். திரும்பி கூட பாராமல் போய்விட்டது. அப்ப புத்தகத்தில் இருந்த தகவல்கள் பொய்யா?  The very Hungry Caterpillar என்ற புத்தகத்தில் இருந்த தகவல்கள் உண்மையில்லையா?. ஒரு இலையில் ஒரு முட்டை. அதில் இருந்து வந்த காட்டர்பில்லர். அதற்கு அகோரப் பசி. திங்கள்- ஒரு ஆப்பிள், செவ்வாய் 2 ப்ளம்ஸ்.... வெள்ளி 5 ஆரஞ்சு, சனிக் கிழமை அதன் மெனு பெரிசு. கப் கேக், சீஸ் கேக், செரி பை, சீஸ்.... இப்படி ஏகப்பட்டதை நொறுக்கிவிட்டு வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை ஒரு பெரிய இலையை சாப்பிட்டு, தன்னைச் சுற்றி ஒரு கூட்டினை உருவாக்கி, அதில் 2 கிழமைகள் இருந்து ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சியாக வெளிவருகிறது. இது தான் லீசா சொன்ன கதை. அது Fiction என்று என் ஆசிரியை லீசா சொன்னதன் அர்த்தம் இப்ப எனக்கு உறைத்தது.  தினமும் என் செல்லத்தை தேடுகிறேன். காணவில்லை. அழகிய மலரில் ஒரு வண்ணத்துப்பூச்சி அமர்ந்து தேன் குடித்துவிட்டு பறந்தது. அது தான் என் செல்லமாக இருக்கும். அதை விரட்டிக் கொண்டு ஓடினேன். அது கைகளில் அகப்படாமல் ஓடி மறைந்தது.
இப்ப வெள்ளை, மஞ்சள், ப்ரவுன், இப்படி பல வர்ண நிறங்களில், பல திசைகளிலும் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இதில் எது என் செல்லம் என்று தெரியாமல் குழம்பி நின்றேன். ஒரு வேளை ஒரு பெயர் சூட்டியிருந்தால் கூப்பிட்டதும் வந்து நிற்குமோ?




Saturday, April 12, 2014

எனக்கில்லையா?



எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட மலர்செண்டுகள் என்னைப் பார்த்து கேலியாக சிரித்தது போல இருந்தது. எனக்கு மட்டும் ஏன் மலர்கொத்து கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை அதற்கான தகுதி எனக்கில்லையோ? இல்லாவிட்டால் நான் அவர்களின் நண்பர்கள் குழுவில் இல்லையோ?  சரி. இப்ப என்ன ஆச்சு? இந்த வாடிப் போகும் மலருக்காக நான் என் வேலையைக் கூட கவனிக்காமல் ஆளாய் பறக்கிறேன். இனிமேல் கவலைப்பட போவதில்லை. 
என்ன இருந்தாலும் லீசா அப்படி செய்தது சரியில்லை. நான் எங்கு போனாலும் இவர்களுக்கும் சேர்த்து அன்பளிப்பு பொருட்கள் வாங்கி, அதை அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் முகங்களில் ஏற்படும் சந்தோஷத்தினைக் கண்டு உவகை கொண்டு... ஒரு வேளை நான் தான் இவர்களை நண்பிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ? என்ன இந்த மலர்செண்டு ஒரு ஐந்து டாலர்கள் இருக்குமோ? இன்று வீட்டுக்கு போகும் முன்னர் சூப்பர் மார்க்கெட் போய் நான்கு மலர்செண்டுகள் வாங்கினால் தான் என் கோபம் அடங்கும் போலிருந்தது. வாங்குவது மட்டும் அல்ல. ஒரு கொத்து மலரினை இங்கே கொண்டு வந்து, ஒரு ஜாடியில் தண்ணீர் நிரப்பி, அந்த மலர்செண்டினை அதில் வைக்காவிட்டால் என் பெயர் நிலா அல்ல. 
" நிலா, என்ன யோசனை?", என்றபடி வந்த நாடலி  முகத்தினை பார்க்க பிடிக்காமல் வேறு பக்கம் பார்வையினை திருப்பிக் கொண்டேன்.
" என்னவோ போ நிலா. இன்று நான் இருந்த பக்கம் கூட நீ வரவில்லை. நேரம் கிடைத்தால் வா. எனக்கு ஒரு முக்கியமான பேப்பர் நீ காப்பி பண்ணி தர வேண்டும்", என்று விட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் சென்ற நாடலி மீது கோபம் வந்தது.
ம்ம்ம்ம்... போ..போ.. நான் வரப் போவதில்லை. குளமான என் கண்களை மெதுவாக துடைத்துக் கொண்டேன்.
ஒரு முக்கிய விடயமாக நிக்கோல் அறைக்கு செல்ல நேர்ந்தது. அங்கு லீசா அன்பளிப்பாக கொடுத்த மலர்செண்டு  தண்ணீர் ஜாடியில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. " நிலா, ஃப்ளவர்ஸ் சூப்பரா இருக்கில்லை?. இது லீசா எங்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒன்றாக வாங்கி வந்திருந்தா. ஜாக்கி  அறையில் ஒன்று, நாடலி அறையில் ஒன்று.. வாவ்! எவ்வளவு அழகு பார்", என்ற நிக்கோலை எரித்துவிடுவது போல பார்த்தேன்.
" எங்கள் ஊரில் செத்தவர்களுக்கு தான் மலர் கொண்டு போய் சாத்துவார்கள்", என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டே, வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டேன்.
" நிலா, என்னாச்சு? ", என்றாள் நிக்கோல். 
" ஒன்றும் இல்லை", என்றபடி விரைவாக நகர்ந்தேன். நல்லவேளை வார்த்தைகளை அவசரப்பட்டு கொட்டவில்லை. இனிமேல் வாயே திறக்கப்போவதில்லை. அன்று செய்ய வேண்டிய வேலைகளில் பிஸியாக இருந்தாலும், அந்த மலர்ச்செண்டு மட்டுமே மனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
நான் இப்படி இருக்க காரணம் மலர்செண்டா அல்லது அவர்கள் நண்பிகள் குழுவில் நான் இல்லை என்கிற காரணமா? அவர்கள் எல்லோரும் அமெரிக்கர்கள். நான் ஆசியாவில், சபிக்கப்பட்ட இலங்கையில் பிறந்து, என் இருபதுகளின் நடுப்பகுதி வரை சொந்த நாடு, வீடு இல்லாமல் சுற்றித் திரிந்து, கடைசியில் என் கணவரை மணந்து, குடியுரிமை பெற்று, என் மகள் பள்ளி போகத் தொடங்கியதும், நானும் வாலண்டியராக வேலை பார்த்து, என் சுறுசுறுப்பினை பார்த்து பள்ளியிலேயே வேலை கொடுத்தார்கள். லீசாவை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தெரியும். ஆரம்பத்தில் இருந்தே  கூடப் பிறக்காத சகோதரி போல எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். 

இனிமேல் லீசா என் சகோதரி இல்லை. சகோதரி என்ன? நண்பி லிஸ்டில் கூட அவரில்லை.  டீச்சர்ஸ் லவுஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். என் செல் போனை எடுத்து, என் கணவரின் எண்களை அழுத்தினேன்.
" நிலா", என்று என்னவரின் குரல் கேட்டதும், அழுகை கரை புரண்டு ஓடியது.
" லீசா எனக்கு மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. நான் அதற்கு கூட தகுதி அற்றவளா?", என்று கூறிய என்னை இடைமறித்தார்.
" வெயிட். வெயிட். லீசா மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா?. இன்று வேலையால் வரும்போது நான் வாங்கிவருகிறேன். சரியா?", என்று போனை வைத்துவிட்டார் கணவர்.
அழுகையுடன் மேசையில் தலை கவிழ்ந்தேன். 
" நிலா, இன்று முழுக்க உன்னை பார்க்க முடியவில்லையே? என்னாச்சு? ", என்றபடி என் அருகில் வந்த லீசாவை கண்டதும் கண்ணீரை துடைக்க  விரைந்தேன்.
" ஏன் உன் முகம் இப்படி சிவந்து போய் இருக்கு. இரு நான் போய் மருந்து கொண்டு வருகிறேன். நீண்ட நாட்களாக இருமல் வந்து நீ கஷ்டப்படுவது தெரியும்", என்றபடி காணாமல் போன லீசா ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் வந்தார். 
" இன்று என் கணவர் எனக்கு மலர்ச்செண்டு வாங்கி வருகிறேன் என்று சொன்னார்", என்றேன் ஆற்றாமையுடன். 
" அப்படியா. நல்லது. அப்ப உனக்கு இன்று இரண்டு மலர்ச்செண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. நானும் உனக்கு ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். காலையில் பிஸியாக இருந்தமையால் உன்னிடம் சொல்ல  முடியவில்லை. மீட்டிங் அது இதென்று இழுத்தடித்து விட்டார்கள்... என்று சொன்ன லீசாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் லீசா.

என் வரவேற்பறையினை அலங்கரித்த மலர்களில் லீசாவின் அன்பளிப்பு தான் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது. என்ன இருந்தாலும் என் நண்பி இல்லை இல்லை என் சகோதரி கொடுத்த அன்பளிப்பு அல்லவா? அப்படித்தான் இருக்கும் இல்லையா!

Saturday, March 29, 2014

அவன் வள்ளி ஆனான்


நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது துறு துறுவென பார்த்துக் கொண்டிருந்த அம்மா பூனை, அதன் குட்டிகள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் என்று நினைத்தவன் என் மகள் மஞ்சுவை கண்டதும் கோபத்தினை அடக்கி கொண்டு, வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். என் முகத்தினை வைத்தே நான் என்ன வகையான மனநிலையில் இருக்கிறேன் என்று கண்டுபிடிப்பதில் கெட்டிக்காரி மஞ்சு.
அருகே வந்து அமர்ந்தவள் மடியின் மீது அம்மா பூனை வந்து ஏறிக் கொள்ள, குட்டிகள் அவளின் பாவாடை நுனியை இழுத்து விளையாட, மஞ்சு பெருமையாக என்னைப் பார்த்தாள். கோபத்தினால் சிவந்த முகத்தினை இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் போராடினேன்.
" அப்பா, வள்ளிக்கு கொஞ்சம் சாப்பாடு தாருங்கள்", என்றவள் என் பதிலை எதிர்பாராமல், தட்டின் ஓரத்தில் இருந்த ரொட்டி துண்டினை பூனைக்கு எடுத்து ஊட்டிவிட்டாள்.
வள்ளி இல்லை கொள்ளிவாய் வாய் பிசாசு, என்று மனதில் திட்டியபடியே, மேலோட்டமாக சிரித்து வைத்தேன். நான் சிரித்ததும்  குட்டி கொள்ளிவாய் பிசாசுகள் என் மடியின் மீது தாவி ஏறி, என் முகத்தின் மீது அவற்றின் ஈரமான மூக்கினை உரச, நான் கோபத்தினை அடக்கி கொண்டே சமையல் அறையினை நோக்கி சென்றேன்.

இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமா அல்லது அந்த வள்ளி குடும்பம் இருக்க வேண்டுமா என்று நீயே முடிவு செய்து கொள், என்று கீச்சுக் குரலில் சொன்ன என்னை மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவளின் செய்கை உணர்த்தியது.

எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. நாய், பூனை எல்லாமே காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய விலங்கினங்கள். அதை வீட்டில் அடைத்து வைத்து என்ன கொடுமை என்று அலுத்துக் கொள்வதுண்டு.
இந்த பூனை எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு விபத்து. பக்கத்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்ததை விட எங்கள் வீட்டில்தான் அதிகமாக இருக்க ஆரம்பித்தது. சுவரில் இருக்கும் ஒரு ஓட்டை வழியாக வர ஆரம்பித்தது. அந்த ஓட்டையின் மீது செங்கல்லை வைத்து மூடினேன். நீ பாறாங்கல்லை வைத்தாலும் நான் வந்தே தீருவேன், என்று தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
சொந்த வீட்டில் கிடைத்த மீன் முற்கள், எலும்புத் துண்டுகள், பழைய சோறு இவற்றை விட எங்கள் வீட்டில் கிடைத்த பாலுக்கும், இறைச்சித் துண்டுகளுக்கும் அடிமையாகிப் போனது பூனை. கில்லி என்ற தனது சொந்தப் பெயர் நாளடைவில் மறந்து போனது. எங்கள் வீட்டில் வள்ளல் என்று நாமகரணம் சூட்டினாள் என் மகள். ஒரு நாள் வள்ளல்  வயிற்றை தள்ளிக் கொண்டு நின்ற போது தான் அது பெண் பூனை என்று விளங்கியது. என் முட்டாள் தனத்தினை நானே கடிந்து கொண்டேன். பூனை ஆணா, பெண்ணா என்று தெரியாமல் அதனை வீட்டில் ஏற்றுக் கொண்டது எங்கள் தவறு தான். மகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வள்ளல் என்பது வள்ளி என்று பெயருடன் வலம் வந்தது.


ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் என்று பிறக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் பிரசவ நேரம் வள்ளி செய்யும் அழும்பு தாங்க முடியாது. ஸ்டோர் ரூமில் பிரசவம் ஆனதும் குட்டிகளை வாயில் கவ்வியபடி ஒவ்வொரு அறையாக ஓடித் திரியும். அந்தக் குட்டிகளை உறவினர்கள், நண்பர்கள் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு, அவர்களுக்கு இலவசமாக கொடுத்து முடிப்பதற்குள் எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய்விடும். வள்ளிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வைத்தால் என்னவென்று அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன்.
அதெல்லாம் அதிக செலவு ஆகும், என்று நண்பர்கள் சொன்னார்கள். அதை விட அதை எங்காவது கண் காணாத தூரத்தில் கொண்டு போய் விட்டு வா, என்றார்கள். அதற்கு மகள் ஒத்துக் கொள்ள வேண்டுமே. அவள் கல்லூரிக்கு  அடுத்த மாதம் செல்ல இருக்கிறாள். அதாவது அங்கேயே தங்கி படிக்க இருக்கிறாள். வீட்டிற்கு  மாசத்தில் இரண்டு நாட்கள் வந்து போவதாக ஏற்பாடு. அவள் போனதும் வள்ளிக்கு ஒரு வழி பண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மனைவிக்கும் தெரியாமல் காரியத்தினை கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும். 

குறிப்பிட்ட நாளில் நண்பன் கோணிப் பையுடன் வந்துவிட்டான். அரும்பாடுபட்டு வள்ளி குடும்பத்தினரை பிடித்தாயிற்று. இரண்டு வருடங்களின் முன்பு வள்ளியை கோணிப்பையில் கொண்டு போய் சற்றே தொலைவான இடத்தில் விட்டு விட்டு நான் வீடு வந்து சேரும் முன்னர் வள்ளி வீடு வந்து சேர்ந்தது ஞாபகம் வந்தது. எனக்கே என் மீது எரிச்சல் உண்டானது. அதன் பிறகு அதன் மீது கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது உண்மைதான். வள்ளி மீண்டும் கர்ப்பம் ஆனபோது என் இரக்கம், பச்சாதாபம் எல்லாம் காணாமல் போயிற்று.
*****************

"அப்பா, வள்ளிக்கு என்ன ஆயிற்று?", என்றாள் மகள்.
" அதை ஏன் கேட்கிறாய் செல்லம். ஒரு நாள் ரோட்டில் இறந்து கிடந்திச்சு. யாரோ ஒரு கடன்காரன் ஏதோ ஒரு வாகனத்தினை ஏற்றி கொலை செய்துவிட்டான்", என்றேன் பொய்யான சோகத்துடன்.
வள்ளி ப்ரேம் செய்யப்பட்ட போட்டாவில் என்னை முறைப்பது போல இருந்தது. அதன் பிறகு வள்ளி வரவேயில்லை. நான் அவள் எப்படியாவது வழி கண்டுபிடித்து வந்துவிடுவாள் என்று நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினேன். மகளின் சோகமான முகத்தினை பார்க்க சகிக்காமல், ஒரு கடுவன் பூனை வாங்கி, அதற்கு வள்ளி என்று பெயரிட்டு மகளிடம் கொடுத்தேன்.